அமீரக செய்திகள்

அமீரகத்தில் மீண்டும் ஒரு நிலையற்ற வானிலை.. இன்று மதியம் முதல் மழை பெய்யும்.. NCM வெளியிட்ட வானிலை அறிக்கை..!!

ஆண்டு முழுவதும் பெரும்பாலான நாட்களில் வறண்ட காலநிலையே நிலவும் ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த வாரம் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஏப்ரல் 15 – 17) நிலையற்ற வானிலை நாடு முழுவதும் நிலவியது. இதனால், கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 100 மிமீ க்கும் மேலான மழைப்பொழிவுடன் நாடு முழுவதும் கனமழையும் பெய்தது. இதன் காரணமாக அனைத்து எமிரேட்களும் வெள்ளத்தில் மூழ்கியதால் நாடெங்கும் ஒரு அசாதாரண சூழல் நிலவியது.

இந்நிலையில், அமீரகத்தில் மீண்டும் ஒரு நிலையற்ற வானிலை இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு (ஏப்ரல் 22 – 24) நிலவ வாய்ப்பிருப்பதாக அமீரகத்தின் தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று நாட்டின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் NCM கணித்துள்ளது.

அத்துடன், அடுத்த நாளான நாளை செவ்வாய்கிழமை (ஏப்ரல் 23) நாட்டில் கூடுதல் மழை எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆயினும் எச்சரிக்கும் அளவில் பாதிப்புகள் இருக்காது எனவும் NCM தனது வானிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கூடவே, புதன் கிழமைக்குள் வெப்பநிலை ஐந்து முதல் ஏழு டிகிரி வரை குறைவதோடு வானிலை நிலைமை மேம்படும் எனவும் வானிலை மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) காலநிலை நிபுணர் டாக்டர் அஹ்மத் ஹபீப் இது குறித்து ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “அமீரகத்தில் மீண்டும் ஒரு நிலையற்ற வானிலைக்கு வாயப்புள்ளது. இதனால் நாட்டில் லேசான மழை அல்லது தூறல் பெய்ய வாய்ப்பு உள்ளது. மேகங்கள் மேற்கு கடற்கரையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி நகர்கின்றன. இதன் விளைவாக லேசான மழை பெய்து, பின்னர் மேகங்கள் மலைகளை நோக்கி கிழக்கு திசையில் முன்னேறும், அங்கு மேகக் கூட்டங்கள் உருவாகி மலைப்பகுதிகளில் மட்டுமே மிதமான மழைக்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “திங்கட்கிழமை மதியம் மழை பெய்யத் தொடங்கும், மேக மூட்டம் படிப்படியாக அதிகரித்து இரவிலும் மழை தொடரும். செவ்வாய் முழுவதும் குறிப்பாக பகல் நேரத்தில் கிழக்கு பகுதியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பின்னர் வெப்பநிலை சற்று அதிகரித்து அதன் பிறகு புதன்கிழமை ஐந்து முதல் ஏழு டிகிரி வரை வெப்பநிலை குறையும்” என்றும் டாக்டர் ஹபீப் கூறியுள்ளார்.

அத்துடன், இந்த மழையினால் துபாய் மற்றும் ஷார்ஜா மீண்டும் பாதிக்கப்படுமா என்று கேட்கப்பட்டதற்கு, “​​துபாய் மற்றும் ஷார்ஜாவில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளன. உண்மையில், மலைப் பகுதிகளுக்கு நெருக்கமான இடங்களில் மிதமான மழை பெய்யும். நாட்டின் வடக்குப் பகுதியில் ராஸ் அல் கைமா மற்றும் உம் அல் குவைன் ஆகிய இடங்களில் ஓரளவு மழை பெய்யும்” எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

கூடவே, “இந்த நிலையற்ற வானிலை குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை. தற்போதைய சூழ்நிலையில் அதிக மழைப்பொழிவு இல்லை. கடந்த வார நிகழ்வுடன் இதனை ஒப்பிட முடியாது. தற்போது நிலவும் வானிலை தீவிரமாக இருக்கப் போவதில்லை; அவை மிகவும் மிதமானவை. இறுதியாக புதன்கிழமை காலை இந்த மேக மூட்டம் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே ஓமான் நோக்கி நகரும்,” என்றும் டாக்டர் ஹபீப் உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்காலம் முடிந்து தற்போது கோடைகாலம் தொடங்கவிருப்பதால், இந்த நேரத்தில் வானிலையில் விரைவான ஏற்ற இறக்கங்களை குடியிருப்பாளர்கள் எதிர்பார்க்கலாம் என்று கூறியதுடன், “நாம் தற்போது குளிர்காலத்திற்கும் கோடைகாலத்திற்கும் இடையிலான வசந்த காலத்தில் இருக்கிறோம், இதனால் வசந்த காலத்தில் அடிக்கடி நிலையான மற்றும் நிலையற்ற வானிலை இரண்டையும் நாம் அனுபவிக்கிறோம்.” என்றும் டாக்டர் ஹபீப் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!