அமீரக செய்திகள்

அமீரகத்தில் அடுத்து வரவிருக்கும் 5 நாள் தொடர் விடுமுறை… தேதிகளை வெளியிட்ட வானிலை மையம்… எத்தனை நாட்கள்.?

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டின் முதல் நீண்ட விடுமுறை நாட்களான ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாளுக்கான 9 நாட்கள் தொடர் விடுமுறை, அரசு மற்றும் சில தனியார் துறை ஊழியர்களுக்கு நாளையுடன் முடியவுள்ளது. எனினும், சில தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நேற்றுடன் விடுமுறை முடிந்து இன்று அவர்கள் பணிக்கும் திரும்பியுள்ளனர்.

ஆயினும், அமீரகத்தில் அடுத்த நீண்ட விடுமுறை நாட்கள் எப்போது வரும் என்று தனியார் துறை ஊழியர்கள் உட்பட அமீரக குடியிருப்பாளர்கள் அனைவரும் இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் அமீரகத்தில் அடுத்த நீண்ட விடுமுறை எப்போது வரும் என்பது குறித்த விபரங்களை நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.

எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் (Emirates Astronomical Society) கூற்றுப்படி, இபுராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் ஹஜ் யாத்திரையின் ஒரு அங்கமான அரஃபா தினம் (Arafa Day) ஜூன் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட வாய்ப்புள்ளதாக அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, அதற்கு அடுத்த நாளான ஜூன் 17ம் தேதி திங்கட்கிழமை, முஸ்லிம்களின் இரண்டாவது பெரிய பண்டிகையான ஈத் அல்-அதா எனும் தியாகத் திருநாள் வரவிருப்பதால், அமீரக குடியிருப்பாளர்கள் குறைந்தது ஐந்து நாட்களுக்கு மற்றொரு நீண்ட வார இறுதியை அனுபவிக்கலாம்.

இது குறித்து எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் இப்ராஹிம் அல் ஜர்வான் (Ibrahim Al Jarwan) கூறுகையில், வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில், ஜூன் 16 அன்று அரஃபா தினமாகவும், ஜூன் 17 அன்று ஈத் அல் அதா வரக்கூடும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே, அரஃபா தினம் மற்றும் ஈத் அல் அதாவைக் குறிக்கும் வகையில் ஜூன் 16 முதல் ஜூன் 19 வரை நான்கு நாள் பொது விடுமுறைக்கு UAE கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, ஜூன் 16ம் தேதிக்கு முந்தைய தினமான சனிக்கிழமை (ஜூன் 15) வார இறுதி விடுமுறை நாள் என்பதால் அரசு மற்றும் சில தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈத் அல் அதா என்பது இஸ்லாத்தில் கொண்டாடப்படும் இரண்டு முக்கிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும், இது உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் தியாகத்தை நினைவுகூறும் வகையில் குறிக்கப்படுகிறது. மேலும் இந்த நாளில், சிறப்பு பிரார்த்தனைகள், விருந்துகள் மற்றும் தொண்டு செயல்களுடன் உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களும் சிறப்பாக கொண்டாடுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!