அமீரகத்தில் குறிப்பிட்ட ஊழியர்களுக்கு மட்டும் 10 நாட்கள் ஈத் விடுமுறை..!! அறிவிப்பை வெளியிட்ட எமிரேட்..!!

புனித ரமலான் மாதம் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஈத் அல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாளுக்காக தயாராகி வருகின்றனர். அதிலும் இந்த வருடத்தின் முதல் நீண்ட நாட்கள் விடுமுறையாக இது வரவிருப்பதால் அமீரகக் குடியிருப்பாளர்கள் மிக உற்சாகத்துடன் பொது விடுமுறையைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.
ஈத் அல் ஃபித்ர் நெருங்கி வருவதை முன்னிட்டு ஐக்கிய அரபு அமீரக அரசாங்கமானது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈத் அல் ஃபித்ருக்காக அதன் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஒரு வார விடுமுறையை அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தனியார் துறை ஊழியர்களுக்கும் ஈத் அல் ஃபித்ருக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷார்ஜா அரசு இன்று (திங்கள்கிழமை) எமிரேட்டின் பொதுத்துறை ஊழியர்களுக்கு ஒரு வார விடுமுறையை அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஷார்ஜா அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பின் படி, மத்திய அரசு ஊழியர்கள் ஈத் அல் ஃபித்ரைக் கொண்டாட ஏப்ரல் 8 திங்கட்கிழமை முதல் ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறையைப் பெறுவார்கள் என்பதும், மீண்டும் ஏப்ரல் 15 திங்கள் அன்று வழக்கம் போல் அலுவலகங்கள் செயல்படும் என்பதும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஷார்ஜாவில் அதிகாரப்பூர்வ வார இறுதி நாட்கள் என்பதால், வழக்கமாக வாரத்தில் நான்கு நாள் வேலை செய்யும் அரசாங்க ஊழியர்களுக்கு ஈத் அல் ஃபித்ரைக் கொண்டாட 10 நாள் விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அமீரக அரசானது தனியார் துறை ஊழியர்களுக்கு ரமலான் 29 (ஏப்ரல் 8, திங்கள்) முதல் ஷவ்வால் 3 வரை விடுமுறை கூறப்பட்டுள்ளது. ரமலான் மாதம் 29 ல் முடிவடைந்தால் வியாழக்கிழமை வரையும் ரமலான் மாதம் 30ல் முடிவடைந்தால் வெள்ளிக்கிழமை வரையிலும் விடுமுறை கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
அதிலும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் விடுமுறை கொண்டவர்களுக்கு ரமலான் 30ல் முடிவடைந்தால் அது தொடர் 9 நாட்கள் விடுமுறையாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ரமலான் மாத முடிவானது பிறை பார்ப்பதன் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel