அமீரக செய்திகள்

பயணிகளின் கவனத்திற்கு.. எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை .. விமான நிலையத்தில் நெரிசலை தவிர்க்க டிப்ஸ்..!!

துபாயின் முதன்மையான விமான நிறுவனமான எமிரேட்ஸ் இன்னும் இரண்டு நாட்களில் உச்சகட்ட விமானப் பயணம் தொடங்கும் என்று விமான பயணிகளை எச்சரித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் தேசிய தினம் மற்றும் கிறிஸ்துமஸ் என பண்டிகை விடுமுறைகள் வருவதால், விமானப் பயணிகள் தங்களின் பயணத்தை கவனமாக திட்டமிடுமாறும் விமான நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், டிசம்பர் வார இறுதி நாட்களில் ஒவ்வொரு நாளும் துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து (DXB) 75,000க்கும் அதிகமான பயணிகள் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், குறிப்பாக இந்த வார தொடக்கத்தில் ஏழு சர்வதேச விமான நிறுவனங்கள் ஒன்பது புதிய இடங்களுக்கு சேவைகளைத் தொடங்குவதால் பயணிகளின் போக்குவரத்து அதிகளவில் இருக்கும் என்றும் எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற பரபரப்பான காலத்தில் பயணிகள் விமான நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பின்வரும் உதவிக்குறிப்புகளையும் எமிரேட்ஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்காக பட்டியலிட்டுள்ளது.

ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப் செக்-இன் வசதி

எமிரேட்ஸ் வாடிக்கையாளர்கள் Emirates.com இல் ஆன்லைன் மூலமாகவும், அதேபோன்று Emirates மொபைல் ஆப் வழியாகவும் முன்கூட்டியே செக்-இன் செய்யலாம். ஆன்லைன் செக்-இன் மற்றும் மொபைல் ஆப் செக்-இன் இரண்டும் விமானம் புறப்படும் நேரத்திற்கு 48 மணிநேரம் முன்னதாகவே திறந்திருக்கும்.

கூடவே விமானங்களை முன்பதிவு செய்து மாற்றவும், பெரும்பாலான இடங்களுக்கு டிஜிட்டல் போர்டிங் பாஸைப் பதிவிறக்கவும், உங்கள் விமானத்தைப் பற்றிய அறிவிப்புகளைப் பெறவும், என்ன உணவு வழங்கப்படும் என்பதைச் சரிபார்க்கவும், வணிக வகுப்பில் உங்கள் சூடான உணவை முன்பதிவு செய்யவும் எமிரேட்ஸ் ஆப் பயனுள்ளதாக இருக்கும்.

சிட்டி செக்-இன் வசதி

துபாயில் இருந்து புறப்படும் பயணிகள், புறப்படுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பும், அமெரிக்காவுக்குப் பறக்கும் பட்சத்தில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பும் முன்கூட்டியே செக்-இன் செய்து தங்களின் லக்கேஜை விமான நிலையத்தில் இறக்கிவிடலாம். பின்னர் புறப்படும் நேரத்தில் வாடிக்கையாளர்கள் விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற பகுதிக்கு நேரடியாக செல்லலாம்.

மேலும், விமான நிலையத்திற்கு செல்வதற்கு பதிலாக துபாய் இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சென்டரில் (DIFC) ICD புரூக்ஃபீல்ட் பிளேஸில் உள்ள எமிரேட்ஸ் சிட்டி செக்-இன் மற்றும் டிராவல் ஸ்டோரிலும் செக்-இன் செய்யலாம். இங்கு பயணிகள் தங்கள் லக்கேஜ்களை விமானம் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்திற்கு முன்பு வரையிலும் செக்-இன் செய்யலாம்.

வீட்டிலிருந்தே செக்-இன் வசதி

துபாய் மற்றும் ஷார்ஜா பயணிகள் தங்கள் வீட்டிலிருந்தே செக்-இன் வசதியை தேர்வு செய்யலாம். DUBZ ஏஜெண்டுகள் வாடிக்கையாளரின் வீடு, ஹோட்டல் அல்லது அலுவலகத்தில் செக்-இன் செயல்முறையை முடிக்கலாம். பயணிகள் குறைந்தபட்சம் 24 மணிநேரம் முன்பாக முன்பதிவு செய்து, விமானம் புறப்படுவதற்கு ஆறு மணிநேரம் வரை செக்-இன் செய்ய முடியும். முதல் வகுப்பு பயணிகளுக்கு ஹோம் செக்-இன் சேவையானது இலவசம் ஆகும்.

அஜ்மானிலிருந்து புறப்படும் பயணிகள்

அஜ்மானில் இருந்து தங்கள் பயணங்களைத் தொடங்குபவர்கள் அஜ்மான் சென்ட்ரல் பஸ் டெர்மினலில் 24 மணிநேர சிட்டி செக்-இன் மூலம் பயனடையலாம். இங்கு பயணிகள் விமானம் புறப்படுவதற்கு 4 மணிநேரம் முன்பு வரை செக்-இன் செய்யலாம் மற்றும் லக்கேஜ்களை செக் இன் செய்து, போர்டிங் பாஸ்களை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், 20 திர்ஹம்சுக்கு பஸ் டிக்கெட்டை வாங்கி, எமிரேட்ஸ் டெர்மினல் 3 க்கு நேரடியாக செல்லலாம். அங்கு நாள் முழுவதும் காலை 4 மணி முதல் இரவு 11.30 மணி வரை வழக்கமான பஸ் புறப்படும். விமான நிலையத்திற்கு வந்தவுடன், பயணிகள் தங்கள் விமானத்திற்குச் செல்லலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உதவி

மாற்றுத்திறனாளிகள் இதுபோன்ற பண்டிகைக் காலத்தில் பயணம் செய்யும் போது பயிற்சி பெற்ற எமிரேட்ஸ் மற்றும் விமான நிலைய ஊழியர்களிடமிருந்து அர்ப்பணிப்புள்ள உதவியை அணுகலாம். மேலும், விமான நிலையத்தில் 2 மணிநேர வாகன நிறுத்தம் மற்றும் செக்-இன், பாஸ்போர்ட் கட்டுப்பாடு, பாதுகாப்பு மற்றும் முன்னுரிமை போர்டிங் ஆகியவற்றிலும் பிரத்யேக அணுகலை பெறலாம்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!