அமீரக செய்திகள்

துபாய்: ஒரு வாரம் ஆகியும் வடியாத வெள்ளம்.. இடங்களை காலி பண்ண குடியிருப்பாளர்கள் முடிவு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் பெய்த பெருமழைக்குப் பிறகு, துபாயின் பெரும்பாலான பகுதிகள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வீதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இருப்பினும், துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள சில தெருக்களிலும் குடியிருப்பு இடங்களிலும், ஆறு நாட்களுக்குப் பிறகும் கூட வெள்ளம் இன்னும் வடியாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கிப்போயுள்ளது.

குறிப்பாக அல் மஜாஸ், ஜமால் அப்துல் நசீர், அல் வஹ்தா, முடோன், வார்சன், டிஸ்கவரி கார்டன் மற்றும் இன்னும் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலையும் வெள்ளம் வடியாமல் இருந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகமும் இன்னும் சீரமைக்கப்படாததால் பல குடியிருப்பாளர்கள் தங்களின் கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, இப்பகுதிகளில் உள்ள குடயிருப்பு கட்டிடங்களில் பல ஆண்டுகளாக தங்கியிருக்கும் குடியிருப்பாளர்கள் இடங்களை காலி பண்ண முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும், தங்களின் வாடகை ஒப்பந்தம் காலாவதியான பிறகு அதனை புதுப்பிக்கப் போவதில்லை என்றும், தண்ணீர் தேங்காத பிற பகுதிகளுக்கு இடம் பெயர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அபு ஷகாராவில் 9 ஆண்டுகளாக வசிக்கும் இந்திய குடியிருப்பாளர் பிரியா பிரசன்னா என்பவர் கூறுகையில், தற்போதைய வெள்ள பாதிப்பைப் பார்த்ததும் அடுத்த ஆண்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான நேரம் வரும்போது இடத்தை காலி செய்து வேறு இடத்திற்கு வெளியேறப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று வார்சன் 1ல் வசிக்கும் இந்தி்யாவைச் சேர்ந்த மற்றொரு குடியிருப்பாளரான பைசல் அகமது என்பவர் தெரிவிக்கையில், டேங்கர்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றினாலும் மழை பெய்து 6 நாட்களுக்குப் பிறகும் அந்தப் பகுதி இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, பலமுறை அழைத்தும் கட்டிட உரிமையாளர் வரவில்லை என்று கூறிய பைசல், ஒப்பந்தம் முடிந்த பிறகு மாற்று இடங்களை தேட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

அல் மஜாஸ் பகுதியில் வசிக்கும் அபு அயத் என்ற குடியிருப்பாளரும் இந்த வருடத்தில் இரண்டாவது தடவையாக எங்கள் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது, இதனால் இந்த இடத்தை விட்டு வெள்ளம் தேங்காத பகுதிகளுக்கு இடம்பெயர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பெய்த கனமழைக்கு முன்னதாக இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் பெய்த மழையின் போதும் கூட இந்தப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், தற்போதையை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு இந்த இடங்களை காலி செய்து விட்டு வெள்ளம் தேங்காத பகுதிகளில் குடிபெயர வேண்டும் என்ற எண்ணத்தை குடியிருப்பாளர்களுக்கு தூண்டியுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!