அமீரக செய்திகள்

UAE: வீட்டுப் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை உண்டா? வேலை நேரம், வருடாந்திர விடுப்பு பற்றி அமீரக சட்டம் என்ன சொல்கிறது?

அமீரகத்தில் பொது மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு வருடத்தில் பல ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாட்கள் கிடைக்கிறது. தற்சமயம், ஈத் அல் பித்ருக்கான நீண்ட விடுமுறைகளையும் தனியார் துறை ஊழியர்கள் அனுபவித்து வருகிறார்கள்.

பெரும்பாலான குடியிருப்பாளர்கள் வழக்கமாக இந்த இடைவேளைகளில் தங்கள் வெளியூர் பயணங்களையும் வெளிநாட்டு விடுமுறைகளையும் திட்டமிடுவார்கள். எனவே, அத்தகைய வீடுகளில் உள்ள வீட்டு வேலை செய்பவர்களுக்கு சிறிது நேரம் ஓய்வு கிடைக்கும்.

இருப்பினும், பொது விடுமுறை நாட்களில் நாட்டில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு வீட்டுப் பணியாளர்களின் உதவி தேவைப்படும். இது போன்ற பண்டிகை நாட்களில் வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் குழந்தைகளை பராமரிப்பவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறதா? அவர்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பைப் பெறுவதற்கான உரிமை பற்றி சட்டம் என்ன சொல்கிறது? போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதிலை இங்கே பார்க்கலாம்.

ஐக்கிய அரபு அமீரகம் 2022 இல் புதுப்பித்த வீட்டுப் பணியாளர்கள் சட்டத்தில், வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் முதலாளிகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டுப் பணியாளர்களுக்கு வாராந்திர விடுமுறைகள், ஊதியத்துடன் கூடிய விடுப்புகள், வேலை நேரம், தினசரி இடைவேளை மற்றும் கூடுதல் நேர ஊதியம் ஆகியவற்றைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

UAE வீட்டுப்பணியாளர்கள் சட்டத்தின் படி, குழந்தைகளை பராமரிக்கும் ஆயாக்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறைகள் கிடையாது. அதேபோன்று உத்தியோகபூர்வ நீண்ட வார இறுதி நாட்களில் விடுமுறை அளிப்பது முதலாளிகளின் விருப்பத்திற்குரியது.

எவ்வாறாயினும், ஒரு வீட்டுப் பணிப்பெண்ணின் ஓய்வு நாளில் ஒரு பொது விடுமுறை வந்து, அந்த நாளில் வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டால், அவருக்கு ஒரு நாள் ஓய்வுக்காக மாற்று விடுமுறை அளிக்கப்பட வேண்டும் அல்லது பணமாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

வேலை நேரம், விடுமுறை நாட்கள்

வீட்டுப் பணியாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. மேலும் அவர்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேர தொடர் ஓய்வு உட்பட குறைந்தது 12 மணிநேரம் ஓய்வெடுக்க வேண்டும்.

ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள்

அமீரக சட்டத்தின் படி, இத்துறையில் பணிபுரியும் பணிப்பெண்கள், ஆயாக்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். ஒரு வருடத்திற்கும் குறைவான சேவையில் இருந்து ஆறு மாதங்களுக்கு மேல் பணிபுரிபவர்கள் “ஒவ்வொரு மாத சேவைக்கும் இரண்டு நாட்கள் விடுப்பு” பெறலாம்.

அதுமட்டுமில்லாமல் சூழ்நிலையைப் பொறுத்து, தொழிலாளியின் விடுப்பு தேதியை முதலாளி தீர்மானிக்கலாம் என்றும் 30-நாள் காலத்தை தேவையான இரண்டு பகுதிகளாகவும் பிரிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒரு வீட்டுப் பணிப்பெண் தனது வருடாந்திர விடுமுறையின் போது வேலை செய்ய வேண்டியிருந்தால், இந்த நாட்களை அடுத்த வருடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இருப்பினும், ஒரு வீட்டுப் பணிப்பெண் தனது வருடாந்திர விடுப்பில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைக்கு மேல் வேலை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வேலை ஒப்பந்தம் முடிவடைந்தவுடன் பயன்படுத்தப்படாத விடுப்புக்கு பணமாக பெற்றுக் கொள்ளலாம். முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒரு சுற்றுப்பயண டிக்கெட்டை  (Round ticket) வழங்க வேண்டும்.

அதேபோன்று வருடாந்திர விடுப்பைத் தவிர, UAE வீட்டுப்பணியாளர்கள் சட்டத்தின் படி ஆயாக்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்களுக்கு வருடத்திற்கு 30 நாட்கள் நோய்வாய்ப்பட்ட விடுப்புக்கும் உரிமை உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!