அமீரக செய்திகள்

துபாய்: வெள்ளத்தால் முடங்கியவர்களுக்கு உதவ இந்தியர் உருவாக்கிய வாட்ஸ் அப் குழு.. இரவு பகல் பாராமல் உதவும் 6000 தன்னார்வலர்கள்..!!

அமீரகத்தில் இந்த வாரத் தொடக்கத்தில் இரண்டு நாட்களாக பெய்த கனமழை குடியிருப்பாளர்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் பெரும்பாலானோர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே தஞ்சமடையும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இத்தகைய சூழலில், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கேரளாவைச் சேர்ந்த துபாய் குடியிருப்பாளர் ஒருவரால் தொடங்கப்பட்ட ரெயின்சப்போர்ட் (RainSupport Group) என்ற ஆதரவுக் குழு, பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. இந்த வாட்ஸ் அப் குழுவைச் சேர்ந்த சுமார் 6,000 தன்னார்வலர்கள் நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கு உதவிகளைச் செய்துள்ளனர்.

இந்தக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தங்குமிடம், உணவு, மருந்து, மளிகைப் பொருட்கள் மற்றும் முக்கியப் பொருட்களை வழங்குவதன் மூலம், கனமழையால் வீட்டில் முடங்கிய குடியிருப்பாளர்களின் துயரத்தைத் தணிக்க அயராது உழைத்து வருகின்றனர்.

தென்னிந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த முனீர் அல் வஃபா (Muneer Al Wafaa) என்கிற 50 வயது நபரே இந்த ஆதரவுக் குழுக்களின் பின்னணியில் இருந்தவர் ஆவார். இது பற்றி அவர் தெரிவிக்கையில், கடந்த செவ்வாயன்று மாலை 6 மணியளவில் இந்த ரெயின்ஸ்சப்போர்ட் வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கியதாகவும், சில மணிநேரங்களில் 1,024 உறுப்பினர்கள் குழுவில் இணைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வெள்ளிக்கிழமை பிற்பகலில், ஆறு குழுக்களை உருவாக்கியதாகவும், அவற்றில் ஐந்து குழுக்கள் முழு திறனில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வாட்ஸ்அப் குழு மட்டுமின்றி, உதவி தேவைப்படும் நபர்கள் மற்றும் உதவி வழங்குபவர்கள் பதிவு செய்து, உதவி ஒருங்கிணைப்பு செயல்முறையை ஒழுங்குபடுத்த முனீர், rainsupportuae.com என்ற இணையதளத்தையும் நிறுவியதாக கூறியுள்ளார்.

இவரின் வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் இணையதளம் மூலம், அவசரமாக மருந்து தேவைப்படும் புற்றுநோய் நோயாளி முதல் இன்ஹீலர் தேவைப்படும் ஆஸ்துமா நோயாளி வரை, உணவு மற்றும் தண்ணீருக்காக தவிக்கும் குடும்பங்களின் எண்ணற்ற கோரிக்கைகள் இரவு பகல் பாராமல் தன்னார்வளர்களின் உதவியால் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் முனீர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட சேவைகளுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றாலும், இரக்கம் மற்றும் ஒற்றுமையின் நெட்வொர்க்கை உருவாக்குவதே இதன் குறிக்கோள் என்றும், சேகரிக்கப்பட்ட குடியிருப்பாளர்களின் எந்தத் தரவும் கண்டிப்பாக ரகசியமாக இருக்கும் மற்றும் உதவிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இதில் ரொக்க நன்கொடைகள் ஏற்கப்படுவதில்லை என்று குறிப்பிட்ட அவர், பதிவு செய்யப்பட்ட உணவுகள், பழங்கள், பால், ரொட்டி மற்றும் தண்ணீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் பங்களிப்புகளை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், களத்தில் இருக்கும் தன்னார்வலர்களே உண்மையான ஹீரோக்கள் என்று கூறியு அவர், எல்லோரும் வெவ்வேறு தேசிய இனங்கள், வயது மற்றும் பின்னணியில் இருந்து வந்தவர்கள், ஆனால் ஒரு பொதுவான காரணத்திற்காக ஒன்றுபட்டுள்ளனர் என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த ஆதரவு குழுவில் இருந்து பல்வேறு துணைக்குழுக்கள் உருவாகியுள்ளது, அவற்றில் உள்ள தன்னார்வலர்கள் சிலர் உணவு உதவியில் கவனம் செலுத்தியதாகவும், மற்றவர்கள் கார் உரிமையாளர்கள் தொலைத்த நம்பர் பிளேட்களை மீட்டுக் கொடுப்பதில் கவனம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த குழுக்கள் தவிர, கூடுதலாக, பாக்கிஸ்தானின் கராச்சியை சேர்ந்த துபாய் குடியிருப்பாளரான கன்வால் மாலிக் (Kanwal Malik) என்பவரால் நிர்வகிக்கப்படும் பல்வேறு ஆதரவு குழுக்களும் துபாயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, பொதுவாக மர்கஸ் துபாய் என்று அழைக்கப்படும் Markazu Saqafathi Sunniya Al Islamiya Dubai போன்ற உள்ளூர் அமைப்புகளும் இந்த முயற்சியில் இணைந்து, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களை பணிக்காக அணிதிரட்டுகின்றன.

இதற்கிடையில், இந்திய கலாச்சார மன்றத்தின் (ICF) ஷார்ஜாவின் பிரதிநிதிகள் அல் நஹ்தா மற்றும் அல் மஜாஸில் உள்ள ஏராளமான மக்களை சந்தித்துள்ளனர். முன்னதாக, அல் அய்னின் ICF பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகைக்கு முன்னதாக மசூதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்னும் ஷார்ஜாவின் தொழில்துறை பகுதி, அல் மஜாஸ், அபு ஷகாரா, ஜமால் அப்துல் நசீர் தெரு மற்றும் அல் காசிமியா போன்ற பகுதிகளில் நிலைமை மோசமாக இருப்பதாக தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!