அமீரக செய்திகள்

மோனோரயில், மினி ஃபாரஸ்ட், கிரீன் கார்டன்: துபாயின் புதிய ஏர்போர்ட்டில் இன்னும் என்னவெல்லாம் வரப்போகுதுனு தெரியுமா.?

துபாயில் இருக்கக்கூடிய துபாய் வேர்ல்ட் ட்ரேட் சென்டரில் 23வது ஏர்போர்ட் ஷோ எனும் கண்காட்சியானது சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த கண்காட்சியில் உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக உருவாகவிருக்கும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் (DWC) கட்டிமுடிக்கப்பட்டதும் எப்படி இருக்கும் என்பது பற்றி அதன் வடிவமைப்பிற்கு பொறுப்பான துபாய் ஏவியேஷன் இன்ஜினியரிங் ப்ராஜெக்ட்ஸ் (DAEP) நிறுவனம் விரிவான முன்னோட்டத்தை வழங்கியுள்ளது.

இதற்கு முன்னதாக, DWC இல் புதிய பயணிகள் முனையத்தின் (terminal) வடிவமைப்பிற்கு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ஒப்புதல் அளித்த போது, கடந்த மாத இறுதியில் X தளத்தில் புதிய பயணிகள் முனையத்தின் ஆரம்ப புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.

புதிய விமான நிலையத்தின் சிறப்பம்சங்கள்:

தற்பொழுது, DAEP நிறுவனம் DWCஇன் புதிய பயணிகள் முனையத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் அங்கு என்னெவெல்லாம் இருக்கும் என்பது பற்றி இரண்டரை நிமிட வீடியோவாக வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், விமான நிலையத்தின் உட்புறத்தில் ஆங்காங்கே நிலப்பரப்புகள் மற்றும் கடல் வாழ்விடங்களை காட்சிப்படுத்தும் LED திரைகள், மீன்வளத்தின் மாபெரும் ப்ரொஜெக்ஷன், பசுமையான மரங்கள் மற்றும் பயணிகள் ஓய்வெடுக்கக்கூடிய பரந்த பசுமை மண்டலங்கள் இருப்பதைக் காணமுடிகிறது.

DWC இன் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று, டெர்மினல்களுக்கு இடையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் உயர்த்தப்பட்ட மோனோரயில் அல்லது தானியங்கி மக்கள் இயக்கம் (APM) அமைப்பாகும். இந்த மோனோரயில் விமான நிலையம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வெப்பமண்டலக் காடுகள் வழியாக பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DAEP இன் படி, DWC பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் புதுமைகளை இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அதிவேக ரயில் (எதிஹாட் ரயில்), புதிய மெட்ரோ பாதை, விமான டாக்ஸி மற்றும் தன்னாட்சி வாகனங்கள் மூலம், துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்ற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பே, தங்களுடைய சாமான்களை ஹோட்டல், சிட்டி டெஸ்க் அல்லது வீட்டிலிருந்தே செக்-இன் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

இதுதவிர, போர்டிங் கேட்களில் தாராளமான திறந்தவெளிகள் இருக்கும் மற்றும் கடைகள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்காகவும் பெரிய இடங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

தானியங்கி முக அங்கீகாரம்:

புதிய டெர்மினல் கட்டி முடிக்கப்பட்டதும், DWC தற்போதைய துபாய் சர்வதேச விமான நிலையத்தை (DXB) விட ஐந்து மடங்கு பெரியதாக இருக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்படிருந்தது. அத்துடன் புதிய விமான நிலையமானது, புறப்படும் கேட்களில் வரிசைகளை தவிர்க்கும் வகையில், இதுவரை ஏவியேஷன் துறையில் பயன்படுத்தாத தானியங்கி முக அங்கீகார தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அண்டர்க்ரவுண்ட் பேக்கேஜ் நெட்வொர்க்:

எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மணி நேரத்திற்கு 30,000 லக்கேஜ்கள் வரை கையாளக்கூடிய கேலரிகள் மற்றும் பேட்ச் சென்டர்களின் அண்டர்க்ரவுண்ட் நெட்வொர்க் மூலம் லக்கேஜ் அனைத்தும் செயலாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கர்ப் சைடில் (curb side) லக்கேஜ்களை இறக்கி வைக்க தானியங்கி ரோபோட்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஓடுபாதைகள்:

DAEP இன் படி, 4.5 கிலோமீட்டர் ஓடுபாதைகள் மிகவும் மேம்பட்ட விமான வழிகாட்டி அமைப்புடன் பொருத்தப்பட்டிருக்கும். விரைவான எக்ஸிட்கள் (exit way), இரட்டை டாக்ஸிவேகள் (taxi way) மற்றும் பெரிய தரைவழி சேவை சாதன சாலைகள் ஆகியவை பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனுக்காக செயல்படுத்தப்படும். விமானநிலையத்தின் மையத்தில் இரண்டாவது கட்டுப்பாட்டு கோபுரம் அமைக்கப்படும்.

DWC , B747-800 மற்றும் A-380 விமானங்கள் போன்ற கனமான மற்றும் நீளமான விமானங்களுக்கு மொத்தம் 70 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஐந்து இணையான ஓடுபாதைகளைக் கொண்டிருக்கும். அவற்றில் நான்கு 1,500 மீட்டருக்கும் அதிகமான இடைவெளியில் இருக்கும் மற்றும் ஒரே நேரத்தில் நான்கு இணை விமான அணுகுமுறைகளை அனுமதிக்கும் என்று DAEP தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு:

புதிய டெர்மினல் மற்றும் கான்கோர்ஸ்கள் (concourse) ஒளிமின்னழுத்த சோலார் பேனல்கள் போன்ற சுத்தமான ஆற்றல் மூலங்களை முழுமையாக நம்பியிருக்கும் மற்றும் ஆற்றல் உள்ளீடுகளைக் கட்டுப்படுத்த அதிக செயல்திறன் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட கட்டிடங்கள் சூரிய மெருகூட்டல் மூலம் மூடப்பட்டிருக்கும் என்பதால் DWCஇன் செயல்பாடுகள் முற்றிலும் நிலையானதாக இருக்கும் என்று DAEP உறுதியளித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், துபாய் முனிசிபாலிட்டியுடன் ஒருங்கிணைந்து, மறுசுழற்சி உத்தியை மேற்கொள்ளும் என்பதால் பூஜ்ஜிய கழிவுகளை உறுதி செய்வதுடன் சாம்பல் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், ஒடுக்கம் மற்றும் மழைநீர் சேகரிப்பு ஆகியவற்றின் உதவியுடன் நீர் குறைப்பு சுமார் 70 சதவீதமாக இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மதிப்பிடப்பட்ட செலவு

ஏற்கனவே, வெளியான அறிவிப்பின் படி, 128 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் புதிய பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகள் உடனடியாகத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் DWC ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 260 மில்லியன் பயணிகளையும் 12 மில்லியன் டன் சரக்குகளையும் செயலாக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!