மே 22ம் தேதி அமீரக வானில் தோன்றவிருக்கும் ‘ஃப்ளவர் மூன்’.. மிஸ் பண்ணிடாதீங்க..
நீங்கள் வானில் தோன்றும் நட்சத்திரங்கள், நிலவு மற்றும் கிரகண நிகழ்வுகள் போன்றவற்றை பார்த்து ரசிப்பதில் மிகுந்த ஆர்வமுடைய வானியல் ஆர்வலரா? அப்படியானால், எதிர்வரும் மே 22 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் இரவு வானத்தை அலங்கரிக்கவிருக்கும், ஃப்ளவர் மூன் என்று அழைக்கப்படும் மே மாத முழு நிலவைக் காணும் வாய்ப்பைத் தவற விடாதீர்கள்.
மேலும், அன்றைய தினம் சாதாரண அளவை விட பெரிய அளவில் காட்சியளிக்கும் முழுநிலவு மிகவும் பிரகாசத்துடன் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் என்பதால், அமீரக மக்கள் தொலைநோக்கிகள் அல்லது தொலைநோக்கிகள் இன்றியும் அதைக் காண முடியும்.
முழுநிலவை படம்பிடிக்க சரியான தருணம்:
பிரகாசமான ஃப்ளவர் மூனை புகைப்படங்களில் படம்பிடிக்க சிறந்த நேரம் நிலவு தோன்ற ஆரம்பிக்கும் நேரம் தான். எனவே, சிறந்த காட்சிகளுக்கு மக்கள் உயரமான இடத்திற்குச் செல்ல வேண்டும் அல்லது தடையற்ற பகுதியைக் கண்டறிய வேண்டும் என்று துபாய் வானியல் குழுமத்தின் CEO ஹசன் அல் ஹரிரி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த நிலவுக்கு ப்ளான்ட்டிங் மூன், மில்க் மூன் மற்றும் ஹரே மூன் என்ற மற்ற பெயர்களும் உண்டு.
இது குறித்து அமிட்டி துபாய் சாட்டிலைட் கிரவுண்ட் ஸ்டேஷன் மற்றும் அமிசாட், அமிட்டி யுனிவர்சிட்டி துபாய் திட்ட இயக்குநர் ( Project Director – Amity Dubai Satellite Ground Station and AmiSat, Amity University Dubai) சரத் ராஜ் கூறும்போது, “ஒவ்வொரு முழு நிலவுக்கும் பருவம் மற்றும் இயற்கை சுழற்சிகளைப் பிரதிபலிக்கும் பெயர் சூட்டப்பட்டது. மே மாதம் வளர்ச்சியின் காலமாக இருப்பதால், உலகின் பல பகுதிகளில் பூக்கள் பூக்கும் என்பதால், இந்த இயற்கை நிகழ்வைப் போற்றும் வகையில் மே மாதத்தில் வரும் முழு நிலவுக்கு ‘ஃப்ளவர் மூன்’ என்று பெயரிடப்பட்டது” என்று விளக்கமளித்துள்ளார்.
பொதுவாக, பூமியைச் சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதையில் வலம் வரும் போது நிலவு பல்வேறு கட்டங்களை கடந்து செல்கிறது. குறிப்பாக, சந்திரன் சூரியனில் இருந்து பூமியின் எதிர் பக்கத்தில் இருக்கும் சமயத்தில், அதன் முழு ஒளிரும் பக்கமும் பூமியை எதிர்கொள்ளும் போது முழு நிலவு கட்டம் ஏற்படுகிறது.
இதனாலேயே முழு நிலவு மிகவும் பிரகாசமாகவும், இரவின் பெரும்பகுதியில் காணக்கூடியதாகவும் தோன்றுகிறது, மாலை நேரத்தில் தோன்றி விடியற்காலையில் சூரிய உதயத்தின் போது மறைகிறது என்று விளக்கப்பட்டுள்ளது.
துபாயில் மே 22 மற்றும் 23 ஆம் தேதி மாலைகளில் பிரகாசமான முழுநிலவு இரவு வானில் காட்சியளிக்கும். இது வழக்கமான முழு நிலவுடன் ஒப்பிடும்போது அளவு மற்றும் பிரகாசத்தில் உள்ள வேறுபாடு நுட்பமானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel