சவூதியில் நிலவும் கடும் வெப்பம்: 68 இந்தியர்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ஹஜ் வழிபாட்டாளர்கள் உயிரிழப்பு..!!

உலகெங்கிலும் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் ஹஜ் செய்வதற்காக சவுதி அரேபியாவிற்கு புனித பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், மெக்காவில் நிலவும் கடுமையான வெப்பம் தாங்க முடியாமல் பலர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 18 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த புனித பயணத்தில், இதுவரை பலியானோரின் மொத்த எண்ணிக்கை 900க்கும் அதிகமாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.
அவற்றில் இந்தியாவில் இருந்து சென்ற வழிபாட்டாளர்களில் 68 பேர் உயிரிழந்திருப்பதாக சவூதி அரேபியாவில் உள்ள தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் பலர் வயதானவர்கள் எனவும், சிலர் இயற்கையான காரணங்களுக்காகவும், மேலும் சிலர் வானிலை காரணமாகவும் உயிரிழந்திருப்பதாகவும் அவர் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் அதிகமானோர் எகிப்தியர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான், செனகல், துனிசியா மற்றும் ஈராக்கின் தன்னாட்சி பெற்ற குர்திஸ்தான் பிராந்தியங்களும் இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளன.
தற்சமயம் சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் முழுவதிலுமே கோடைகாலத்தை முன்னிட்டு கடும் வெப்பம் நிலவி வருகிறது. சமீப நாட்களாக வெப்பநிலையானது கிட்டத்தட்ட 50 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் வெப்பநிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel