அமீரக செய்திகள்

அவசர சூழ்நிலைகளுக்கு மட்டும் 999ஐ அழைக்குமாறு பொதுமக்களை வலியுறுத்திய துபாய் போலீஸ்..!!

துபாய் காவல்துறையின் 999 என்ற அவசர எண்ணுக்கு ஈத் விடுமுறையின் போது சுமார் 71,370 தொலைபேசி அழைப்புகள் வந்ததால், அவசரகால சூழ்நிலைகளுக்கு மட்டும் 999 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும், அவசரமற்ற சூழ்நிலைகளுக்கு 901 என்ற எண்ணை அழைக்குமாறும் குடியிருப்பாளர்களளை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

நான்கு நாள் ஈத் அல் அதா விடுமுறையில் மட்டும் கிட்டத்தட்ட 77,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளைக் கையாண்டதாகவும், அவற்றில் 999 என்ற அவசர எண்ணுக்கு 71,370 அழைப்புகளும், 901 என்ற அவசரமில்லாத எண்ணுக்கு 6,433 அழைப்புகளும் அடங்கும் என்று துபாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையிலான தொலைபேசி அழைப்புகள் வருவது துபாய் காவல்துறைக்கு புதிதல்ல. கடந்த ஆண்டு, 2.1 மில்லியன் அழைப்புகளுக்கும், 2022 இல், 7.4 மில்லியன் அழைப்புகளுக்கும் அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். ஏனெனில் அவசரமற்ற சூழ்நிலைகளில் 999ஐ அழைப்பதனால் அந்த நேரத்தில் அவசர தேவையுடையவர்களுக்கு பதிலளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களிலும், தேசிய மற்றும் மத நிகழ்வுகளிலும் பொதுமக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்காக துபாய் காவல்துறை முயற்சிகள் மற்றும் தயாரிப்புகளை தீவிரப்படுத்தியதாக துபாய் காவல்துறையின் பொது செயல்பாட்டுத் துறையின் துணை இயக்குநர் பிரிகேடியர், துர்கி அப்துல் ரஹ்மான் பின் ஃபாரிஸ் கூறியுள்ளார்.

இதற்கிடையில், சிறப்பு நடவடிக்கைகளுக்கான அதிகாரி மேஜர் ஜெனரல் அப்துல்லா அலி அல் கைதி பேசுகையில், துபாய் காவல்துறை 429 பாதுகாப்பு ரோந்துகள், 21 நில மீட்பு ரோந்துகள், 34 கடல் பாதுகாப்பு படகுகள், இரண்டு ஹெலிகாப்டர்கள், 35 ஆம்புலன்ஸ்கள், 51 மிதிவண்டிகள், 10 கடல் மீட்பு படகுகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தயார்நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுதவிர 62 சிவில் பாதுகாப்பு வாகனங்களையும் பாதுகாப்புக்காக நிறுத்தியதுடன் விடுமுறை நாட்களில் கடுமையான நெரிசலைத் தடுக்க அதிகாரிகள் 439 தொழிலாளர் பேருந்துகளின் வழியைத் திருப்பிவிட்டதாகவும், அத்துடன் போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்தை கண்காணிக்கும் ஏழு கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பாட்டில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!