துபாயில் AED 17,000 க்கு மேல் தள்ளுபடி வழங்கும் புதிய ‘நோல் டிராவல் கார்டு’ அறிமுகம்..!! RTA வெளியிட்ட தகவல்…

வெளிநாடுகளில் இருந்து துபாய் வரும் சுற்றுலாப் பயணிகள், அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்களுக்காக பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் 17,000 திர்ஹம் வரை தள்ளுபடியை வழங்கும் ‘Nol Travel Card‘ எனும் புதிய நோல் கார்டை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிமுகம் செய்துள்ளது.
துபாயில் இன்று (ஜூன் 10) திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய நோல் கார்டு வைத்திருப்பவர்கள் துபாயில் பொது போக்குவரத்து, பார்க்கிங் மற்றும் பிற பொழுதுபோக்கு மற்றும் அனுபவங்களுக்கு பணம் செலுத்த இதனை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நோல் கார்டானது துபாய் எமிரேட்டில் உள்ள ஹோட்டல்கள், கடைகள், சாகச நிகழ்வுகள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் பல விற்பனை நிலையங்களில் 5 முதல் 10 சதவீதம் வரையிலான தள்ளுபடியை வழங்கும் என்றும் RTA ஆல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆரம்ப கட்டங்களில் புதிய Nol Travel Card துபாய் சர்வதேச விமான நிலையத்திலும் (DXB) Zoom மற்றும் Europcard போன்ற சில பார்ட்னர் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த கார்டை தொடக்கத்தில் 200 திர்ஹம்ஸ் விலையில் 19 திர்ஹம்ஸ் இருப்புடன் வாங்கலாம், பின்னர் ஆண்டின் இறுதியில் 150 திர்ஹம்ஸ்க்கு கார்டைப் புதுப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தற்போதுள்ள நோல் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த நோல் டிராவல் கார்டுக்கு மாற முடியாது என்றும், எதிர்காலத்தில் அதை செயல்படுத்த பரிசீலிப்பதாகவும் RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து RTA வின் கார்ப்பரேட் தொழில்நுட்ப ஆதரவு சேவைகள் துறையின் CEO முகமது அல் முதர்ரெப் கூறும் போது, “இந்த கார்டு வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டது, பொதுப் போக்குவரத்து மற்றும் நகரத்தின் வசதிகளை ஒரு கார்டு மூலம் ஒருங்கிணைத்து, 100 சதவீதத்திற்கும் அதிகமான மற்றும் 17,000 திர்ஹம்களுக்கு மேல் மதிப்புள்ள தள்ளுபடியுடன் ஒரு கட்டண முறையாக இதை உருவாக்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த கார்டு தற்போது அட்டை வடிவில் வழங்கப்படும் எனவும், விரைவில் பார்கோடு மூலம் டிஜிட்டல் கார்டை சேர்க்கும் திட்டம் எங்களிடம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கூடவே, எதிர்காலத்தில் தற்போதுள்ள நோல் கார்டுகளில் இருந்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நோல் டிராவல் கார்டுக்கு இருப்புத்தொகையை மாற்றுவதற்கான சாத்தியத்தை RTA ஆய்வு செய்யும் என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel