எமிரேட்ஸ் குழும ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. சேலரி, அலவன்ஸ், லீவ் என அனைத்தையும் உயர்த்தி அதிரடி..!!

துபாயை தளமாக கொண்டு இயங்கி வரும் மிகப்பெரிய குழுமமான எமிரேட்ஸ் குழுமம் தொடர்ந்து சிறப்பாக இலாபம் ஈட்டி வருவதையொட்டி அதன் ஊழியர்களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இக்குழுமம் அதன் ஊழியர்களுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன் வரலாறு காணாத இலாபம் ஈட்டியதைத் தொடர்ந்து ஊழியர்களின் சம்பளத்தில் 20 வாரங்கள் மதிப்பிலான போனஸை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்பொழுது மற்றும் ஒரு சில சலுகைகளை ஊழியர்களுக்கு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டு நிறுவனம் உற்சாகமளித்துள்ளது. இந்நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், எமிரேட்ஸ் குழுமம் தங்கள் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை நான்கு சதவீதம் உயர்த்துவதாக குறிப்பிட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்து கொடுப்பனவு (transport allowance) மற்றும் ஐக்கிய அரபு அமீரக தேசிய தக்கவைப்பு கொடுப்பனவுகளில் (uae retention allowance) நான்கு சதவீதம் அதிகரிப்பு இருக்கும் என்றும் கூறியுள்ளது.
அதேபோல் விமான தளம் மற்றும் கேபின் பணியாளர்களுக்கு, பயணிக்கும் மற்றும் உற்பத்தித்திறன் ஊதியத்தில் (flying and productivity pay) நான்கு சதவீதம் அதிகரிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. கூடுதலாக, அனைத்து ஊழியர்களும் நிறுவனத்தில் உள்ள அவர்களின் கிரேடினை பொறுத்து வீட்டுக் கொடுப்பனவில் (housing allowance) 10-15% அதிகரிப்பைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 28 வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் படி, புதிய அடிப்படை சம்பளம் மற்றும் நிலையான கொடுப்பனவுகளின் (fixed allowance) விவரங்கள் ஜூலை 22 அன்று விநியோகிக்கப்படும் ஒப்பந்த சரிசெய்தல் கடிதத்தில் பிரதிபலிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இறுதி எச்சரிக்கையில் இருக்கும் ஊழியர்களுக்கு அல்லது பணிநீக்கம் செய்யக்கூடிய ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த சம்பள உயர்வு வழங்கப்படாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஜூலை 1, 2024 வரை தகுதிகாண் காலத்தை (probation period) முடிக்காதவர்கள் மற்றும் நோட்டீஸ் பீரியடில் இருப்பவர்களும் இந்த சம்பள உயர்வைப் பெற மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. குழுமத்தின் தலைவரான ஷேக் அஹ்மத் பின் சயீத் அல் மக்தூமினால் அங்கீகரிக்கப்பட்ட 2024 ஊதியம் மற்றும் பலன்கள் மதிப்பாய்வைத் தொடர்ந்து இந்த சம்பளத்தில் மாற்றங்கள் வந்துள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் நன்மைகள்
சம்பள உயர்வு தவிர, ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக அதிகரிப்பது போன்ற கூடுதல் சலுகைகளும் இனி வழங்கப்படும் என்றும் மகப்பேறு விடுப்பு ஐந்து நாட்களில் இருந்து 10 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக பிறந்த குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்களுக்கு முந்தைய ஒரு மணிநேரத்திற்கு மாறாக இரண்டு மணி நேர நர்சிங் பிரேக் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிரேடு 1 முதல் கிரேடு 5 வரை வைத்திருக்கும் ஊழியர்கள் இனி ஆயுள் காப்பீட்டு பிரீமியத்திற்கு (life insurance premium) பங்களிக்க வேண்டியதில்லை என்றும் இதற்கான செலவை அந்நிறுவனம் ஏற்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தவிர, செப்டம்பர் 1, 2024 நிலவரப்படி, குறிப்பிட்ட கிரேடினை வைத்திருக்கும் ஊழியர்களுக்கு நீண்ட கால நோய்வாய்ப்பட்ட விடுப்பு அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல் செப்டம்பர் முதல் கல்வி உதவித்தொகை 10 சதவீதம் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் குழுமமானது தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதைத் தொடர்ந்து சமீப காலங்களில், நிறுவனம் அதன் ஆட்சேர்ப்பு செயல்முறையை தீவிரப்படுத்தியுள்ளது மற்றும் அதிக விமானிகள், விமான பணிப்பெண்கள் மற்றும் பொறியாளர்களை பணியமர்த்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், குழு 2024 இல் 5,000 கேபின் பணியாளர்களை பணியமர்த்துவதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel