வளைகுடா செய்திகள்

குவைத்தில் இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் பெரும் தீ விபத்து.. 49 பேர் பலி.. 50க்கும் மேற்பட்டோர் காயம்..!!

குவைத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தில் இதுவரை இந்திய தொழிலாளர்கள் உட்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு குவைத்தில் உள்ள மங்காஃப் (Mangaf) நகரில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான தகவல்களின்படி மங்காஃப் நகரில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தில் உள்ள ஒரு சமையலறையில் தீ விபத்து ஏற்பட்டதே இந்த பெரிய தீவிபத்திற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் கூறுகையில், கட்டிடத்தில் சுமார் கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 195 நபர்கள் தங்கி இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் தீயில் இருந்து தப்பிக்க கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து இறந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

குவைத் நேரப்படி காலை 6 மணிக்கு (0300 GMT) அதிகாரிகளுக்கு இந்தச் சம்பவம் தெரிவிக்கப்பட்டது என்று மேஜர் ஜெனரல் ஈத் ரஷீத் ஹமாத் கூறினார். அத்துடன் தீ விபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளை இந்திய தூதரும் பார்வையிட்டுள்ளார். மேலும் அந்நாட்டின் துணைப் பிரதமர் ஷேக் ஃபஹத் யூசுப் சவுத் அல் சபாவும் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டுள்ளார்.

இந்நிலையில் தீயில் இருந்து தப்பிய மற்றும் குவைத்தில் ஓட்டுநராக பணிபுரிந்த எகிப்தியர் ஒருவர் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், இந்த தீயானது கீழ் தளத்தில் தொடங்கி தீவிரமாக பரவியதால் மேல் மட்டத்தில் உள்ளவர்களால் தீயில் இருந்து தப்பிக்க முடியவில்லை என்றும் கூறினார். மேலும் கட்டிடம் முழுவதும் அடர்ந்த புகையால் சூழப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

இதற்கிடையில், குவைத்தில் உள்ள இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா விபத்தில் காயமடைந்த பல தொழிலாளர்களை சந்தித்து அவர்களுக்கு தூதரகத்தின் முழு உதவியை உறுதியளித்ததாக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் X தளத்தில் வெளியிட்டது. அதுமட்டுமில்லாமல், இந்திய தூதரகம் அவசர உதவி எண் ஒன்றையும் வெளியிட்டுள்ளது மற்றும் புதுப்பித்த தகவல்களுக்கு ஹெல்ப்லைனில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் X தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், “இன்று இந்தியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட சோகமான தீ விபத்து தொடர்பாக, தூதரகம் அவசர உதவி எண்: 965-65505246 ஐ அமைத்துள்ளது. இது தொடர்பான தகவல்களுக்கு இந்த ஹெல்ப்லைனில் தொடர்பு கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய தூதரகம் உறுதியுடன் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!