வளைகுடா செய்திகள்

ஹஜ் 2024: புனித தலங்களுக்கு இடையே வழிபாட்டாளர்களை ஏற்றிச் செல்ல முதன்முறையாக ஏர் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்திய சவுதி..!!

சவூதி அரேபியாவில் ஹஜ் எனும் புனித பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்காக பல்வேறு வசதிகளை சவூதி அரசு மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக தற்பொழுது நிலவும் வெயிலின் தாக்கத்தை தணிக்க முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே நீர் தெளிக்கும் உபகரணங்கள், நிழற்குடைகள் என வழிபாட்டாளர்கள் தங்களின் ஹஜ் கடமைகளை சிரமமின்றி நிறவேற்ற பல வசதிகளை வழங்கி வருகின்றது. அவற்றில் புதிய மற்றும் உலகின் முதல் முறையாக புனித பயணம் மேற்கொள்ளும் வழிபாட்டாளர்களை புனித தலங்களுக்கு இடையே ஏற்றிச் செல்லும் டிரைவர் இல்லாத ஏர் டாக்ஸியின் சோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சவுதியின் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சேவைகள் அமைச்சரும், சவுதியின் சிவில் விமானப் போக்குவரத்து பொது ஆணையத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவருமான சலே அல் ஜாசர் அவர்களால் இந்த சோதனை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. சவுதி பிரஸ் ஏஜென்சி (SPA) வெளியிட்ட செய்தியின்படி, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் உரிமம் பெற்ற உலகின் முதல் ஏர் டாக்ஸி இதுவாகும்.

மேலும், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் நபர்களை ஒரு புனித தலத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது மட்டுமின்றி, அவசர பயணத்திற்கும், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கும் ஏர் டாக்ஸி சேவைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பைலட் இல்லாத மற்றும் தரையில் இருந்து கட்டுப்படுத்தப்படும், இந்த விமானம் இரண்டு நபர்களுக்கு பொருந்தும் என்றும், 40 கிலோமீட்டர் தூரம் வரை எரிபொருள் இல்லாமல் மின்சாரத்தால் மட்டுமே இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழுமையாக இணங்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணத்திற்கு பறக்கும் டாக்ஸிகள் பயன்படுத்தப்படும் என கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!