அமீரக செய்திகள்

50 டிகிரியையும் தாண்டிய அமீரக வெப்பநிலை..!! வெயிலால் கடும் அவதிப்படும் அமீரகவாசிகள்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்பொழுது நிலவும் கோடை வெயிலின் தாக்கத்தை அமீரகவாசிகளுக்கு சொல்லி தெரிய தேவையில்லை. கட்டிடத்திற்கு வெளியே திறந்த வெளியில் சிறிது நேரம் நின்றால் கூட பல மணி நேரம் வெயிலில் நின்றதைப் போன்ற அசதியை ஏற்படுத்துகிறது தற்பொழுது அடிக்கும் வெயில். அதிலும் திறந்தவெளிகளில் பணிபுரியும் கட்டிட தொழிலாளர்களின் நிலைமையோ இன்னும் பரிதாபம். அமீரக அரசானது அவர்களுக்கு மதிய நேரங்களில் வேலைக்கான தடை அறிவித்தது சற்றே நிம்மதியை கொடுத்தாலும் காலையிலேயே வெயிலின் தாக்கம் அமீரகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்துத்தான் காணப்படுகிறது.

அமீரகத்தில் மிகவும் தீவிரமான கோடை காலம் பொதுவாக ஜூலை நடுப்பகுதியில் தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை நீடிக்கும். இந்த கோடைகாலங்களில் அதிக வெப்பநிலையுடன், ஈரப்பதத்தின் அளவு 90 சதவீதமாக உயரலாம் அல்லது பாலைவனத்தில் இருந்து உருவாகும் தூசி புயல்களும் ஏற்படலாம். இந்த நிலையில் ஜூன் மாதமே வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ளது. அதிலும் இந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், அபுதாபியில் உள்ள ஒவ்டைடில் (அல் தஃப்ரா பிராந்தியம்) பிற்பகல் 2.45 மணிக்கு வெப்பநிலை 50.8°C ஐ எட்டியதன் மூலம், அமீரகத்தில் ஆண்டின் வெப்பமான நாளாக வானிலை ஆய்வு மையம் பதிவு செய்தது. இந்நிலையில் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) கூற்றுப்படி, கடந்த செவ்வாயன்று நாட்டில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக மதியம் 2 மணியளவில் உம் அஜிமுல் (அல் அய்ன்) பகுதியில் 50.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இருப்பினும் பிரபல எமிராட்டி புகைப்படக் கலைஞர் ரஷீத் அஜீஸ் திங்களன்று அபுதாபியின் அல் ஷவாமேக்கில் உள்ள தேசிய வானிலை மையக் குழுவில் 50.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைப் பதிவுசெய்த வீடியோவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வருவதை முன்னிட்டு, வெப்ப பக்கவாதம் மற்றும் வெப்ப சோர்வு நிகழ்வுகள் ஏற்படும் அபாயம் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு குடியிருப்பாளர்களை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் குடியிருப்பாளர்கள் அடிக்கடி தண்ணீர் அல்லது நீர் பானம் அருந்துமாறும், நேரடி சூரிய ஒளியில் செல்வதைத் தவிர்க்கவும், நாளின் நடுப்பகுதியில் வெளியில் செல்வதைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளின் வெப்பமான நேரங்களில் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ஏற்ப, ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை நேரடி சூரிய ஒளியில் மற்றும் மதியம் 12.30 மணி முதல் 3.00 மணி வரை திறந்தவெளிப் பகுதிகளில் வேலை செய்வதைத் தடை செய்யும் மதிய இடைவேளையை அமீரக அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த இடைவேளையின் போது டெலிவரி தொழிலாளர்களுக்காக 6,000 ஓய்வு நிலையங்களை அமைக்க அரசு மற்றும் தனியார் துறைகள் ஒத்துழைத்துள்ளன. இந்த நிலையங்கள் நிழல் தருவதோடு, குளிரூட்டும் சாதனங்கள் மற்றும் குளிர்ந்த நீர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!