இந்திய செய்திகள்

19 ஆண்டு கனவு நனவாகப் போகும் தருணம்.. கேரளாவின் சொந்த விமான நிறுவனம் ‘ஏர் கேரளா’-வின் விமான சேவைகள் விரைவில் தொடக்கம்..

குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் விமானங்களானது, விமான கட்டணத்தை நினைத்து பயணத்தை கைவிடுபவர்களுக்கு சிக்கனமான விலையில் விமான பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கின்றது. குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் நபர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஒரு சில நேரங்களில் விமான கட்டணங்களை எண்ணி தங்களது பயணத்தை கைவிடுகின்றனர் அல்லது கட்டணம் குறையும் வரை பயணத்தை தள்ளி போடுகின்றனர்.

இது போன்று வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வசிக்கும் மலையாளிகளை கருத்தில் கொண்டு புதிய பட்ஜெட் விமான நிறுவனம் ‘ஏர் கேரளா’ தொடங்கப்படவுள்ளது. வளைகுடா நாடுகளை பொறுத்தவரை இங்கு வசிக்கும் வெளிநாட்டவர்களில் மலையாளிகளே முதன்மையாக இருப்பதால் அவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

துபாயைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்களால் இயக்கப்படும் ஏர் கேரளா, கடந்த வார இறுதியில் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடமிருந்து ஆரம்ப தடையில்லாச் சான்றிதழை (NOC) பெற்றதாக கூறப்பட்டுள்ளது. அந்த NOC நகலில், Zettfly Aviation என்ற பெயரில் பதிவுசெய்யப்பட்ட விமான நிறுவனம், மூன்று ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்ட பயணிகள் விமான போக்குவரத்து சேவைகளை இயக்க அனுமதி பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில்முனைவோர்களான அஃபி அகமது மற்றும் அயூப் கல்லாடா ஆகியோரின் சிந்தனையில் உருவான ஏர் கேரளா, இந்தியாவின் தென்கோடி மாநிலமான கேரளாவின் முதல் பிராந்திய விமான சேவையாகும். அத்துடன் மாநிலத்தின் பெயரைக் கொண்டு இயக்கப்படவுள்ள முதல் இந்திய விமானமும் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய அஃபி அகமது, “இது எங்களின் பல வருட உழைப்பின் பலன். இதை நனவாக்க நானும் எனது கூட்டாளிகளும் அயராது உழைத்து வருகிறோம். பலர் எங்களிடம் கேள்வி எழுப்பினர், இது ஒருபோதும் நிஜமாகாது என்று கூறி நிராகரித்தனர். நாங்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது, ஆனால் NOC எங்களுக்கு ஒரு பெரிய படியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, ஏஜென்சி ஸ்மார்ட் டிராவல்ஸ் நிறுவனர் அஃபி அகமது, airkerala.com என்ற டொமைன் பெயருக்காக உள்ளூர் நிறுவனத்திற்கு 1 மில்லியன் திர்ஹம் கொடுத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இதன் மூலம், 2005 ஆம் ஆண்டில் கேரள அரசாங்கத்தால் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ஏர் கேரளாவின் நம்பிக்கையை அவர் புதுப்பிக்கத் தொடங்கியுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டில் வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரள மக்களின் நலனை கருத்தில் கொண்டு குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்க அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் அப்போது நிறைவேறவில்லை. அதற்கான படியினை தற்பொழுது கேரளாவை பூர்வீகமாக கொண்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் தொழிலதிபர்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.

NOC கையில் இருப்பதால், விமான நிறுவனம் அதன் விமானங்களைத் தொடங்குவதற்கு முன் பல மாதங்கள் அடிப்படை வேலைகளைச் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தெரிவிக்கையில் “எங்கள் அடுத்த படிகளில் விமானத்தை வாங்குவது மற்றும் எங்கள் ஏர் ஆபரேட்டர் சான்றிதழை (AOC) பெறுவதற்கு தேவையான ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்குவது ஆகியவை அடங்கும்” என்று அயூப் கல்லடா கூறியுள்ளார். மேலும் கூறுகையில் “இது ஒரு முக்கியமான கட்டமாகும், இது விமான அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு தரநிலைகளை நாங்கள் பூர்த்தி செய்வதை உறுதிசெய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

வணிகர்களின் கூற்றுப்படி, காஸ்மோபாலிட்டன் நகரமான கொச்சியை தலைமையிடமாகக் கொண்ட இந்த விமான நிறுவனம் விமானம் வாங்குவதற்கான நடைமுறையை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆரம்பத்தில், மூன்று ATR 72-600 விமானங்களுடன் செயல்பாடுகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விமானம் வாங்கப்பட்டவுடன், ஏர் கேரளா சர்வதேச விமானங்களாக இயக்குவதற்கு முன் உள்நாட்டு சேவையில் இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது அடுத்த வருடம் 2025-ல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச விமான சேவைகள் விமான நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என கூறப்பட்டுள்ளது. அதாவது இந்நிறுவனம் 20 விமானங்களுக்கு விரிவுபடுத்தியதும், சேவைகளை சர்வதேச பயணங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த திட்டத்திற்கு தேவையான ஆரம்ப முதலீடு தோராயமாக 110 மில்லியன் திர்ஹம்கள் எனவும தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஃபி கூறுகையில் “நாங்கள் எங்கள் சர்வதேச விமானங்களைத் தொடங்கியவுடன், நாங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாய்ப்புகளை கொண்டு வருவோம். சர்வதேச செயல்பாடு துவங்கியதும், அனைத்து வெளிநாட்டினருக்கும் மலிவு விலையில் பயணத்தை உறுதி செய்வோம். துபாய் எங்கள் முதல் சர்வதேச வழித்தடங்களில் ஒன்றாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!