துபாயில் 210 மில்லியன் திர்ஹம்ஸில் ஆடம்பர ஷாப்பிங் மாலை அமைக்கவுள்ள புகழ்பெற்ற இந்திய நிறுவனம்..!!
நவீனத்திற்கும் ஆடம்பர வாழ்வுக்கும் பெயர் போன நகரமான துபாயில் பல்வேறு மால்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என நிறைந்து காணப்படுகின்றன. இதில் துபாயில் முன்னணி சொத்து மேம்பாட்டாளராக இயங்கி வரும் இந்தியாவைச் சேர்ந்த சோபா ரியாலிட்டி (sobha reality) நிறுவனம், சோபா ஹார்ட்லேண்ட் பகுதியில் 210 மில்லியன் திர்ஹம்களுக்கு புதிய ஷாப்பிங் மாலைக் கட்டவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த வணிக வளாகத்தின் கட்டுமானப் பணிகள் தற்பொழுது தொடங்கப்பட்டதுடன் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய 339,000 சதுர அடி மற்றும் மொத்த குத்தகைக்கு விடக்கூடிய 115,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்தத் திட்டமானது சூப்பர் மார்க்கெட், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு மைதானங்கள், பொழுதுபோக்கு மண்டலம் மற்றும் பல்வேறு வகையான உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இது 35 சில்லறை விற்பனை கடைகள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட உணவு விருப்பங்களுடன் F&B அவுட்லெட்டுகளைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சோபா குழுமத்தின் இணைத் தலைவர் ரவி மேனன் கூறுகையில், இந்த மாலில் பல்வேறு சில்லறை விற்பனைக் கடைகள், சுவையான உணவுகளை தரக்கூடிய உணவகங்கள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு விருப்பங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் “சில்லறை விற்பனை இடத்திற்கு அப்பால், இந்த மால் சமூக ஈடுபாட்டிற்கான ஒரு முக்கிய மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இயற்கை, கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றின் சிறந்த கலவையை வழங்குகிறது, இது பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும்” என்றும் கூறியுள்ளார்.
மாலில் பசுமையான சூழ்நிலையுடன் கூடிய நீர் அம்சங்கள், இயற்கை விளக்குகள், ஆற்றல்-திறனுள்ள விளக்குகள், சோலார் பேனல்கள், ஆகியவை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் லைட்டிங் சிஸ்டம்கள் போன்ற புதுமையான தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel