உலகெங்கிலும் முடங்கிய மைக்ரோசாஃப்ட்.. விமான சேவைகள், வங்கிகள் உள்ளிட்ட பல சேவைகள் பாதிப்பு..!!

உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் இன்று (வெள்ளிக்கிழமை) அதன் ஆன்லைன் சேவைகளில் செயலிழப்பைப் புகாரளித்ததை அடுத்து எழுந்த ஒரு தொடர் தொழில்நுட்பக் கோளாறுகளால் உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சேவைகள் உள்ளிட்ட பல சேவைகளில் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. McDonald’s Corp., United Airlines Holdings Inc. மற்றும் LSE Group ஆகியவை வாடிக்கையாளர் சேவைக்கான தகவல்தொடர்புகளில் பல்வேறு சிக்கல்களை வெளிப்படுத்திய முக்கிய நிறுவனங்களாகும்.
இவை மட்டுமல்லாமல் ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்கா வரையிலான பெருநிறுவனங்கள் இதன் காரணமாக தங்கள் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைப் புகாரளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மைக்ரோசாப்டின் இந்த இடையூறுகளுக்கான காரணம் எது என்பது தற்பொழுது வரை தெளிவாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் CrowdStrike Holdings Inc. சைபர் செக்யூரிட்டி சாஃப்ட்வேரில் இருந்து வந்த சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Azure மற்றும் 365 உள்ளிட்ட மைக்ரோசாஃப்ட் சேவைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து வியாழன் பிற்பகுதியில் அமெரிக்காவில் முதல் முறையாக இந்த சிக்கல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், லண்டன் பங்குச் சந்தையை இயக்கும் LSE குழுமம், உலகளாவிய தொழில்நுட்பச் சிக்கலைச் சந்தித்து வருவதாக கூறப்படுகின்றது. மைக்ரோசாப்ட் செயலிழப்பால் மருத்துவ அமைப்பில் பணிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு சில சேனல்களின் நேரடி ஒளிபரப்பு தடைபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் அதன் அனைத்து விமான நிலையங்களும் தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளது. உலகளாவிய தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக அதன் பெரும்பகுதி செயல்பாடுகளை இடைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக டச்சு விமான நிறுவனமான KLM வெள்ளிக்கிழமை அறிவித்தது. ஐரோப்பாவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஆம்ஸ்டர்டாமின் விமான நிலையம் Schiphol, வெள்ளிக்கிழமை உலகளாவிய IT செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
அதே போல் ஐந்து இந்திய விமான நிறுவனங்களும் இன்று தங்கள் முன்பதிவு அமைப்புகளில் சிக்கல்களை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளன. “எங்கள் சிஸ்டம்ஸ் தற்போது மைக்ரோசாப்ட் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளன” என்று இந்தியாவைச் சேர்ந்த விமான நிறுவனமான இண்டிகோ சமூக ஊடக தளத்தில் தெரிவித்துள்ளது. தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா, “தற்போதைய மைக்ரோசாப்ட் செயலிழப்பால் அதன் கணினிகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயண தாமதங்கள் ஏற்படுகின்றன” என கூறியுள்ளது.
அதே போல் “தொழில்நுட்ப சவால்களுக்கு பிறகு மேனுவல் செக்-இன் மற்றும் போர்டிங்கிற்கு (manual check-ins and boarding) திரும்பியுள்ளதாக பட்ஜெட் ஆபரேட்டர் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது. இந்தச் சிக்கல்களை உடனடியாகத் தீர்க்க எங்கள் சேவை வழங்குனருடன் எங்கள் குழுக்கள் விடாமுயற்சியுடன் செயல்படுகின்றன என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகாசா ஏர் மற்றும் விஸ்தாரா ஆகியவையும் இந்த பாதிப்புகளை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளன.
இத்தகைய பெரும் பாதிப்புகளை உலகெங்கிலும் உள்ள மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் தற்பொழுது இதில் இருந்து வெளிவருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமெரிக்க மைக்லோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. “எங்கள் சேவைகளில் இன்னும் தொடர்ச்சியான மேம்பாடுகளைக் காண்கிறோம், அதே நேரத்தில் நாங்கள் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்,” என்று நிறுவனம் சமூக ஊடக தளத்தில் தெரிவித்துள்ளது.