அமீரக செய்திகள்

பயண நேரத்தை 12 லிருந்து 3 ஆக குறைக்க 431 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பில் புதிய மேம்பாலம்.. திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய துபாய்..!!

துபாயின் மிக முக்கிய சாலையான ஷேக் சையத் சாலையிலிருந்து துபாய் ஹார்பர் பகுதிக்கு நேரடியாக நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் புதிய பாலம் அமைக்கும் திட்டத்திற்கு துபாய் அரசு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. சுமார் 431 மில்லியன் திர்ஹம்ஸ் திட்ட மதிப்பில் கட்டப்படவுள்ள இந்த புதிய பாலம், பயண நேரத்தை 12 நிமிடங்களில் இருந்து 3 நிமிடங்களாக குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் ஹார்பர் பகுதிக்கு நேரடி நுழைவு மற்றும் வெளியேறும் புள்ளிகளை அமைப்பதற்கான திட்டத்தை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வழங்கியுள்ளது. மேலும், ஷமல் ஹோல்டிங் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளாத அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

துபாயின் நிர்வாக கவுன்சிலால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த திட்டமானது ஷேக் சையத் சாலையில் இருந்து, புளூவாட்டர்ஸ் தீவுக்கும் பாம் ஜுமேரா தீவுக்கும் இடையில் அமைந்துள்ள துபாய் ஹார்பர் வரையிலான 1.5 கிமீ நீளத்திற்கு ஒவ்வொரு திசையிலும் இருவழிப் பாலம் கட்டும் திட்டத்தை உள்ளடக்கியதாகும்.

ஒரு மணி நேரத்திற்கு 6,000 வாகனங்கள்

RTA நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரும், இயக்குநர் ஜெனரலுமான மத்தார் அல் தயர் இந்த திட்டம் பற்றி விவரிக்கையில், “இந்தத் திட்டம் பார்வையாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் நடமாட்டத்தை எளிதாக்க துபாய் துறைமுகத்திற்கு நேரடி நுழைவு மற்றும் வெளியேறலை வழங்குகிறது. ஒவ்வொரு திசையிலும் 1.5 கிமீ நீளமுள்ள மற்றும் ஒரு மணி நேரத்திற்கு 6,000 வாகனங்களுக்கு இடமளிக்கும் வகையில் இரண்டு பாதைகள் கொண்ட மேம்பாலம் கட்டும் பணியை இது உள்ளடக்கியது” என கூறியுள்ளார்.

புதிய மேம்பாலம் கட்டும் திட்டத்தின் மாதிரி வரைபடம்

மேலும், “இந்த பாலம் ஷேக் சையத் சாலையில் ஐந்தாவது சந்திப்பிலிருந்து (அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு அருகில்) துபாய் ஹார்பர் வரை நீண்டுள்ளது, அல் நசீம் மற்றும் அல் ஃபலாக் தெரு வழியாக சென்று கிங் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் தெருவின் குறுக்கு பகுதி வழியாக செல்கிறது” எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், இத்திட்டம் நிறைவடைந்தவுடன் போக்குவரத்து நெரிசலை மேம்படுத்துவதோடு, பயண நேரத்தை 12 நிமிடங்களிலிருந்து 3 நிமிடங்களாகக் குறைக்கும் என்றும் அல் தயர் குறிப்பிட்டுள்ளார்.

துபாய் ஹார்பர்

துபாய் ஹார்பர் பகுதியானது அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்குவதற்கான குடியிருப்பு கட்டிடங்களை உள்ளடக்கிய ஒரு பகுதியாகும். மேலும் இதுவே துபாய் ஹார்பரால் வழிநடத்தப்பட்டு நிர்வகிக்கப்படும் துபாயின் முதல் குடியிருப்பு திட்டமாகும்.

அரேபிய வளைகுடாவில் 550 மீட்டர் நீளமுள்ள 770 மீட்டர் நீள ஓடுபாதையை உள்ளடக்கிய ஸ்கைடைவ் (Skydive) துபாயின் தாயகமாகவும் துபாய் ஹார்பர் உள்ளது. அத்துடன், 24 உயரமான கட்டிடங்கள் மற்றும் சுமார் 7,500 அடுக்குமாடி குடியிருப்புகளும் கொண்ட குடியிருப்பு வளாகத்தை உள்ளடக்கிய இப்பகுதியில் பல வளர்ச்சித் திட்டங்களும் தற்போது நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!