துபாய்: வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு.. Salik வெளியிட்ட புதிய நிபந்தனைகள்.. 10,000 திர்ஹம்ஸ் வரை அபராதம்..!!
துபாயின் டோல் கேட் ஆபரேட்டரான சாலிக் அதன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை புதுப்பித்து புதிய அபராதத்தை அறிவித்துள்ளது. சாலிக்கின் இந்த புதுப்பிக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் துபாயில் விதிமீறலில் ஈடுபடும் அமீரக வாகன ஓட்டிகளுக்கு, ஒரு ஆண்டில் அதிகபட்சமாக ஒரு வாகனத்திற்கு 10,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது புதிய நிபந்தனைகளின் கீழ், விதிமீறலுக்காக வாகனம் ஒன்றுக்கு விதிக்கப்படும் சாலிக் டோலிங் முறையுடன் தொடர்புடைய அதிகபட்ச அபராதத் தொகையானது, ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை என எந்த ஒரு காலண்டர் ஆண்டிலும் 10,000 திர்ஹம்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், சாலிக் டோல் கேட் வழியாகச் செல்லும் போது விதிமீறல் வழங்கப்பட்ட நாளிலிருந்து 13 மாதங்களுக்குள் அவர்களது போக்குவரத்துக் கோப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தால் மட்டுமே வாகன ஓட்டிகள் தங்களின் அபராதத்தை எதிர்த்து விண்ணப்பிக்க முடியும் என்றும், சாலிக் அக்கவுண்டில் இருக்கும் இருப்புதொகை அல்லது இருப்பின் ஒரு பகுதி பயனருக்குத் திருப்பியளிக்கப்படாது அல்லது மற்றொரு சாலிக் கணக்கிற்கு மாற்றப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
சாலிக் டோல் கேட் அமைப்பானது துபாயில் தனது சேவைகளை விரிவுபடுத்தியதைத் தொடர்ந்து இந்த புதிய நிபந்தனைகள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த ஜூலை 1 முதல், துபாய் மாலில் பாரக்கிங் கட்டணத்தை நிர்வகிக்க 5 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் சாலிக் கேட்கள் நிறுவப்பட்டன. மேலும் இங்கு ஒரு மணி நேரத்திற்கு 20 திர்ஹம் முதல் 24 மணி நேர பார்க்கிங்கிற்கு 1,000 திர்ஹம் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படும்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇந்நிலையில், 4.1 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களில் செயலில் உள்ள டேக்-ஐ கொண்டிருக்கும் சாலிக், தனது வாடிக்கையாளர்களிடம் குறைபாடுள்ள சிப்களை பற்றி கண்டறிந்தால் அதனை 90 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் குறைபாட்டைச் சரிபார்த்தவுடன் எந்த விதக் கூடுதல் கட்டணமும் இன்றி புதிய டேக் மாற்றப்படும் எனவும் சாலிக் நிறுவனம் கூறியுள்ளது.
அத்துடன் வாகனம் அல்லது நம்பர் பிளேட் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ, சாலிக் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனம் அல்லது நம்பர் பிளேட்டுடன் தொடர்புடைய சாலிக் டேக்கை செயலிழக்கச் செய்ய அங்கீகரிக்கப்பட்ட தகவல் தொடர்பு சேனல்கள் மூலம் நிறுவனத்திற்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
ஏனெனில், வாகன ஓட்டிகளின் நம்பர் பிளேட் அல்லது வாகனத்தின் இழப்பு அல்லது திருட்டு குறித்து பயனரிடமிருந்து சாலிக் ஆபரேட்டர் அறிவிப்பைப் பெறும் வரை, அந்த நம்பர் பிளேட்டுடன் இணைக்கப்பட்டுள்ள சாலிக் அக்கவுண்டில் இருந்து அபராதம் உட்பட எந்த கட்டணங்களையும் தொடர்ந்து கழிக்க சாலிக் நிறுவனத்திற்கு உரிமை உண்டு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தவிர, 5 வருட காலத்திற்கு டோல் கேட்டை பயன்படுத்தாமல் இருந்தால் மற்றும் பேமெண்ட்கள் அல்லது பேலன்ஸ் ரீசார்ஜ்கள் எதுவும் போடப்படாவிட்டால், சாலிக் கணக்கு தானாகவே செயலிழந்துவிடும். அவ்வாறு அக்கவுண்ட் செயலிழந்தால் அந்த அக்கவுண்டில் மீதமிருக்கும் தொகையை திரும்பப்பெற முடியாது என சாலிக் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel