கேரளா நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரங்கல் தெரிவித்த அமீரகம்..!!

கேரளாவின் வடக்கு பகுதியில் கனமழை பெய்து வந்த நிலையில் அங்குள்ள புகழ்பெற்ற சுற்றுலாதலமான வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் பலர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். கேரளா இதுவரை கண்டிராத பெரும் இயற்கை பேரழிவு என கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இப்பகுதியில் ஒரு முக்கிய பாலம் இடிந்து விழுந்ததால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன என்றும் மாற்றுப் பாலம் கட்டுவதற்கு ராணுவப் பொறியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று முதல்வர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் இணைய இணைப்பு இல்லாததால் மீட்பு பணியும் கடினமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் அதிகளவு எண்ணிக்கை கொண்ட மீட்புக் குழுக்களுடன் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தனது இரங்கலையும், ஒருமைப்பாட்டையும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் வெளியுறவு துறை அமைச்சகமானது, இந்திய அரசுக்கும் மக்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளது. மேலும் இயற்கை சீற்றங்களால் காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடையவும் ஆணையம் வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
நிலச்சரிவால் கேரளாவில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து இன்றும் நாளையும் கேரளாவில் அதிகாரப்பூர்வ துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வரை கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 116 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.