விமானங்கள் தாமதம்.. ATM சேவை பாதிப்பு.. கார்டு பேமெண்ட்டில் சிக்கல்.. அமீரகம் இன்று சந்திக்கும் பாதிப்புகள்..

உலகெங்கிலும் ஏற்பட்டுள்ள மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விமான சேவைகள், வங்கி சேவைகள் உட்பட பல சேவைகள் பாதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் அமீரகத்திலும் நிலவி வருகின்றது. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் முதன்மை விமான நிறுவனங்களான எதிஹாட் ஏர்வேஸ் மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஆகியவை இன்று (வெள்ளிக்கிழமை) பயணம் செய்யும் பயணிகளுக்கு விமான சேவைகளில் தாமதமங்கள் ஏற்படக்கூடும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த உலகளாவிய பிரச்சனை காரணமாக இன்று அனைத்து நாடுகளுமே பல்வேறு சேவைகளில் பாதிப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக பல விமான சேவைகள், வங்கி சேவை, ஸ்டாக் எக்ஸ்சேஞ் சேவை, மருத்துவ சேவை உள்ளிட்ட பல சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றை நிவர்த்தி செய்ய பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அமீரகத்திலும் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அமீரக விமான நிறுவனங்களில் தாமதங்களை எதிர்பார்க்கலாம் என்றும் இதனால் விமான நிலையம் கூட்டமாக இருக்கலாம் என்றும் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் “உலகளாவிய ஐடி சீர்குலைவு குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம், மேலும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இந்த நேரத்தில், எமிரேட்ஸ் விமான நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.
இருப்பினும் எமிரேட்ஸின் விமான நடவடிக்கைகளில் உடனடி பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், பிற விமான நிலையங்களில் தாமதமாக புறப்படுவதால் சில தாமதங்கள் இன்று எதிர்பார்க்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. மேலும் கூறுகையில், “பயணிகள் எங்கள் இணையதளம் மற்றும் செயலியை சமீபத்திய விமானத் தகவல்களுக்குச் சரிபார்த்து, தங்கள் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்” என கூறப்பட்டுள்ளது.
இதே போலவே அபுதாபியை மையமாக கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனமும் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கு முன் துபாய் விமான நிலையமானது IT கோளாறால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது என்றும் தற்பொழுது ஓரளவு சரிசெய்யப்பட்டு விமான சேவைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என்றும் அறிவித்திருக்கின்றது.
விமான சேவைகள் மட்டுமல்லாமல் அமீரகத்தின் அரசு சேவைகளிலும் இதன் தாக்கம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் அமீரகத்தில் இருக்கக்கூடிய ATM, பெட்ரோல் நிலையங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களிலும் சில குடியிருப்பாளர்கள் சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் இந்த இடங்களில் கார்டு மூலம் பணம் செலுத்த இயலாமல் கையில் இருந்து பணம் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கார்டு பேமெண்ட்டை மட்டுமே நம்பி இருக்கும் ஒரு சில குடியிருப்பாளர்கள் இன்று பொருட்களை வாங்க, வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப என பல சேவைகளில் கார்டு பேமெண்ட் இல்லாமல் பணம் மட்டுமே வாங்கப்படும் என கூறப்பட்டதால் கையில் பணம் இல்லாமல் அருகில் உள்ள ATM-ல் பணம் எடுக்கலாம் என சென்றால் அங்கும் பணம் எடுக்க இயலாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel