கோடை வெயிலுக்கு மத்தியில் வளைகுடா நாடுகளில் பெய்த பலத்த மழை.. ஓமானில் 4 பேர், சவூதியில் இருவர் பலி.. அமீரகத்திலும் மழை பதிவு..!!
கோடை வெயில் தற்பொழுது சுட்டெரிக்கும் நிலையிலும் இன்று வளைகுடா நாடுகளின் ஒரு சில இடங்களில் பலத்த மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. அமீரகம் மட்டுமல்லாது ஓமான், சவூதி ஆகிய மற்ற வளைகுடா நாடுகளிலும் மழை பெய்துள்ளது.
ஓமானில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 4 பேர் உயிரிழந்ததுடன ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஓமானின் நிஸ்வாவில் உள்ள வாதி தனுஃப் என்ற இடத்தில் மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் அடித்துச் செல்லப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக, அவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர், ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் சவூதியிலும் ஏற்பட்ட வெள்ளத்தால் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் காணாமல் போன மூன்று பேரை தேடி வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதியின் ஆசிர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்ட வாகனத்தில் இருந்த ஒரு குழந்தையை மீட்புக்குழுவினர் மீட்டெடுத்த போதிலும் இருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் மூன்று பேரை காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அமீரகத்தில் இத்தகைய துயர சம்பவங்கள் ஏற்படவில்லை. அமீரகத்தை பொறுத்தவரை இன்று குதைரா பகுதியில் மழை மற்றும் ஆலங்கட்டி மழை பதிவாகியுள்ளது என்றும், ஹத்தாவிற்கு செல்லும் அல் வதான் சாலை, ஃபுஜைராவிற்கு செல்லும் ஷேக் கலீஃபா சாலை மற்றும் ஷார்ஜாவின் மத்திய பகுதியிலும் குறிப்பிடத்தக்க மழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கூடுதலாக, ஷார்ஜாவின் மத்திய பகுதியில் உள்ள மிலேஹா, அல் ஃபய்யா மற்றும் ஃபிலி ஆகிய இடங்களில் ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. தேசிய வானிலை மையம், சனிக்கிழமையின் வானிலை குறிப்பிட்ட பகுதிகளில் சில நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், பிற்பகலில் மழை பெய்யக்கூடும் என்றும் முன்னரே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஒரு சில இடங்களில் மழை பதிவாகியிருந்த போதிலும் மற்ற இடங்களில் எப்போதும் போலவே வெயில் நிலவியுள்ளது. மேலும் தூசுப்புயலும் ஓரிரு இடங்களில் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அமீரகத்தில் ஏற்பட்ட இந்த தூசிப்புயல் இன்று இரவு வரை நீடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel