துபாய்: பேருந்தில் பயணிக்கும் போது அபராதம் விதிக்கப்பட்டதா..?? அபராதத்தை மறுத்து புகாரளிப்பது எப்படி..?? 5 எளிய வழிமுறைகள்..
குடியிருப்பாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் துபாயில் சுற்றி வருவதற்கு துபாயில் இயங்கி வரக்கூடிய பொதுப் போக்குவரத்தை பெரிதும் நம்பியுள்ளனர். மக்களுக்கு எளிமையான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கும் அதே வேளையில் துபாயின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் பல கடுமையான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளும் உள்ளன. எனவே, பொது போக்குவரத்தை பயன்படுத்துகையில் ஒரு விதியை மீறினால், அவர்களுக்கு அதற்கேற்றவாறு அபராதம் விதிக்கப்படும். சில கடுமையான மீறல்களுக்கு பயணிக்கு 500 திர்ஹம் வரை கூட அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம், கட்டண ஏய்ப்பைத் தடுக்க புதிய பேருந்துகளில் தானியங்கி பயணிகள் எண்ணிக்கை (APC) அமைப்பு நிறுவப்படும் என்று கூறியுள்ளது. அதாவது உண்மையான பயணிகளின் எண்களைப் பதிவுசெய்து, அவற்றை தானியங்கி கட்டண வசூலுடன் பொருத்துவதன் மூலம் இந்த அமைப்பு செயல்படுகிறது.
தற்போது, துபாயில் உள்ள பேருந்து அமைப்பு, பேருந்தில் நுழையும் மற்றும் வெளியேறும் போது, தங்கள் நோல் கார்டுகளை டேப் (tap) செய்து விட்டு செல்வார்கள் என்ற நல்லெண்ணத்தில் பயணிகளை பேருந்துக்குள் நுழைய அனுமதிக்கிறது. இருப்பினும், ஒரு சில பயணிகள் அதைச் செய்யாமல் புறக்கணித்து போக்குவரத்திற்கு கட்டணம் செலுத்தாத நிகழ்வுகளும் உள்ளன.
இவ்வாறு துபாயில் பேருந்து கட்டணத்தை செலுத்தாமல் ஏமாற்றி பிடிபடும் பயணிகளுக்கு 200 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும். இது போன்றே பல விதிமீறல்களுக்கு அதற்கு தகுந்தாற்போல் அபராதங்களையும் துபாய் நிர்ணயித்துள்ளது. இருப்பினும், ஒரு சில நேரங்களில் தவறுதலாக உங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதை மறுக்க விரும்பினால், நீங்கள் அதை ஆன்லைனில் எளிதாகச் செய்யலாம்.
பொதுப் போக்குவரத்து அபராதத்தை ஆன்லைனில் 5 படிகளில் எவ்வாறு மறுப்பது என்பது குறித்து கீழே காணலாம். அவை:
1. அதிகாரப்பூர்வ RTA இணையதளத்திற்குச் செல்லவும். ‘Public Transport’ கீழ்தோன்றும், ‘Bus’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ‘Dispute Form’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. படிவம் திறக்கப்பட்டதும், தகராறு வகையின் கீழ், ‘Public transport users fine (Buses and Marine)’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. ஃபைன் எண், நோல் கார்டு எண், மொபைல் எண் மற்றும் அபராதம் வழங்கப்பட்ட தேதி போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
4. அதன்பின் பின்வரும் ஆவணங்களை ஒரு PDF இல் இணைக்கவும்:
- எமிரேட்ஸ் ஐடியின் நகல் அல்லது பாஸ்போர்ட் நகல்
- விதிமீறல் டிக்கெட்டின் நகல்
- Nol பரிவர்த்தனை வரலாறு
- உங்கள் புகார் செயல்முறையை ஆதரிக்கும் வேறு ஏதேனும் துணை ஆவணங்கள்
5. நீங்கள் படிவத்தைச் சமர்ப்பிக்கும் முன், அபராதத் தொகையின் விவரங்களையும் அதை ஏன் மறுக்க விரும்புகிறீர்கள் என்பதையும் உள்ளிடவும்.
படிவத்தை சமர்ப்பித்தவுடன், புகார்தாரருக்கு 30 நாட்களுக்குள் SMS மூலம் புகாரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel