ராஸ் அல் கைமா முழுவதும் பொருத்தப்பட்டுள்ள AI மூலம் இயங்கும் நவீன கேமராக்கள்..!! பாதுகாப்பை அதிகரிக்க காவல்துறை நடவடிக்கை..!!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வரும் ராஸ் அல் கைமா எமிரேட்டில், போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் சாலைகள் முழுவதும் புதிய மேம்பட்ட செயற்கை நுண்ணறிவால் இயங்கும் கேமரா அமைப்பு தற்போது புதிதாக நிறுவப்பட்டுள்ளது.
நிகழ்நேர தரவுகளை ராஸ் அல் கைமா காவல்துறைக்கு உடனடியாக வழங்கும் இந்த புதிய கேமரா அமைப்பானது, நகரின் குற்றங்களை முன்னறிவிப்பது, தடுப்பது மற்றும் போக்குவரத்து நெரிசல்களை மிகவும் திறம்பட நிர்வகிப்பது போன்றவை தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் முடிவெடுப்பதில் முக்கிய பங்காற்றும் என கூறப்பட்டுள்ளது.
ராஸ் அல் கைமா எமிரேட் முன்னெடுத்துள்ள ‘பாதுகாப்பான நகரம்’ எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டுள்ள இந்த மேம்பட்ட (AI) கேமரா அமைப்பானது, எமிரேட் முழுவதும் சாலை பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உயர்த்த வடிவமைக்கப்பட்டுள்ளதாக ராஸ் அல் கைமா காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அலி அப்துல்லா பின் அல்வான் அல் நுஐமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இப்போது ராஸ் அல் கைமா முழுவதும் பல்வேறு சாலைகள் மற்றும் போக்குவரத்து சந்திப்புகளில் நிறுவப்பட்டுள்ள AI மூலம் இயங்கும் இந்த கேமராக்கள், உலகளவில் கிடைக்கும் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் ஒன்றாகும் என்றும், இந்த அறிவார்ந்த அமைப்புகள் போக்குவரத்து முறைகள் மற்றும் குற்றவியல் நடத்தைகளை பகுப்பாய்வு செய்து தரவுகளை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த நவீன கேமராக்கள் அவசரகால பதிலளிப்பு நேரத்தை அதிகரிக்க நிகழ்நேர தரவை வழங்கும் எனவும், அதிநவீன கண்காணிப்பு சாத்தியமான ஹாட் ஸ்பாட்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு, குற்றச் செயல்களை முன்னறிவிக்கவும் போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் இரண்டிற்கும் பதிலளிக்கும் நேரத்தை கணிசமாகக் குறைக்கவும் பங்களிக்கும் என அல் நுஐமி குறிப்பிட்டுள்ளார்.
ராஸ் அல் கைமா எமிரேட்டின் ‘பாதுகாப்பான நகரம்’ எனும் திட்டமானது, சாலைப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக காவல்துறை மேற்கொண்டு வரும் முயற்சிகளின் முக்கிய அங்கமாகும். போக்குவரத்து மற்றும் குற்றவியல் தரவுகளைத் தொடர்ந்து பகுப்பாய்வு செய்வதன் மூலம், குற்ற விகிதங்களைக் குறைத்தல், பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் குடியிருப்பாளர்களிடையே ஒட்டுமொத்த திருப்தியை அதிகரித்தல் ஆகியவற்றை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel