அமீரகத்தின் ஒரு சில இடங்களில் சட்டென மாறிய வானிலை.. திடீர் மழையால் குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி..!!
அமீரகத்தில் கடந்த இரு நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் தேசிய வானிலை ஆய்வு மையமானது (NCM) இன்று (ஆகஸ்ட் 6) இடியுடன் கூடிய மழை மற்றும் தூசி அல்லது மணலுடன் காற்று வீசும் என்று ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. வெப்பச்சலன மேகங்கள் உருவாவதால் இன்று மழை பெய்யும் வாய்ப்புகள் இருப்பதாக குடியிருப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை, அல் அய்னின் சில பகுதிகளிலும், அபுதாபியின் மையப்பகுதியிலும் லேசான மழை பெய்து வருகிறது. மேலும் சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனத்த மழை மற்றும் லேசான மழையைக் காட்டுகின்றன. மழை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் உள்ள சில பள்ளத்தாக்குகளும் நிரம்பி வழிந்து காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த கோடை மழையானது ஆகஸ்ட் மாத இறுதி வரை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்யவுள்ள நிலையில் ஓமான் கடலில் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், கடல் கொந்தளிப்பாகவும் அவ்வப்போது ஏழு அடி உயர அலைகள் வீசும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை இந்த எச்சரிக்கை நீடிக்கும் எனவும், வெளியில் செல்லக்கூடியவர்கள் கவனத்துடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் புதன்கிழமை இரவு 7 மணி வரை சில கிழக்கு, தெற்கு மற்றும் உள் பகுதிகளில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் புதிய காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய வானிலையை பொறுத்தவரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றும் இது சில நேரங்களில் தூசி நிறைந்ததாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. லேசானது முதல் மிதமான வேகத்தில் வீசும் காற்று, நாட்டில் தூசி மற்றும் மணலை ஏற்படுத்தும் என்பதால், இது கிடைமட்டத் தெரிவுநிலையைக் குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அபுதாபி மற்றும் துபாயில் முறையே 41℃ மற்றும் 42℃ வரை வெப்பநிலை இருக்கும் என்றும், ஆனால் மலைப்பகுதிகளில் இது 25℃ வரை குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel