Nol கார்டின் குறைந்தபட்ச டாப்-அப் தொகையை 50 திர்ஹம்ஸாக உயர்த்திய துபாய்..!! RTA வெளியிட்ட அறிவிப்பு..!!
துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்களில் பெரும்பாலானோர் துபாய் மெட்ரோ, பேருந்து உட்பட பொது போக்குவரத்தை அடிக்கடி பயன்படுத்தி வரும் நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) முதல், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் அலுவலகங்களில் நோல் கார்டுக்கான குறைந்தபட்ச டாப்-அப் தொகை 20 திர்ஹம்ஸில் இருந்து 50 திர்ஹம்ஸாக உயர்த்தப்பட்டுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இருப்பினும், ஆன்லைனில் தங்கள் கார்டுகளை டாப் அப் செய்யும் பயணிகளுக்கு இது பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில்”ஆகஸ்ட் 17, 2024 முதல், மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் அலுவலகங்களில் குறைந்தபட்ச டாப்-அப் 50 திர்ஹம்ஸாக அதிகரிக்கும்” என்று RTA தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில், RTA குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகையை 5 திர்ஹம்ஸில் இருந்து 20 திர்ஹம்ஸாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
அதே போல் மெட்ரோ ட்ரான்ஸிட் நெட்வொர்க்கில் ஒரு சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதற்குப் பயணிகள் தங்கள் நோல் கார்டில் 15 திர்ஹம்ஸ் இருப்பு வைத்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த அறிவிப்பால் இனி நோல் கார்டு வைத்திருக்கும் நபர்கள் 50 திர்ஹம்ஸ் டாப் அப் செய்வதற்கான கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
துபாயை பொறுத்தவரை ப்ரீபெய்டு ஸ்மார்ட் கார்டாக, துபாய் மெட்ரோ, பேருந்துகள், டிராம்கள் மற்றும் வாட்டர்பஸ்கள் உட்பட துபாய் முழுவதும் பொதுப் போக்குவரத்திற்கு பணம் செலுத்த நோல் கார்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும் டாக்ஸி கட்டணம், பார்க்கிங், துபாய் பொது பூங்காக்கள், எதிஹாட் அருங்காட்சியகம் மற்றும் நகரைச் சுற்றியுள்ள 2,000 க்கும் மேற்பட்ட கடைகள், உணவகங்கள் மற்றும் கடைகளுக்குச் செலுத்தவும் இதைப் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel