அமீரகத்தில் முடிவுக்கு வரவுள்ள கோடைகால வெப்பம்..!! வானத்தில் காட்சியளிக்கவுள்ள சுஹைல் நட்சத்திரம்..!! வானியலாளர் தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்றளவும் நீடித்து வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த வெயிலின் தாக்கம் குறைந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனெனில், கோடை வெப்பத்தின் முடிவைக் குறிக்கும் சுஹைல் நட்சத்திரம் இன்னும் சில தினங்களில் வானில் காட்சியளிக்க உள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வானியல் நிகழ்வு, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நிகழ வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் உச்ச கோடையின் முடிவை இது குறிப்பிட்டாலும், வெப்பநிலை உடனடியாகக் குறையாது என கூறப்படுகின்றது. அரேபியர்கள் சொல்வது போல், “சுஹைல் உயர்ந்தால், இரவு குளிர்ச்சியடைகிறது” என்பதற்கிணங்க இது இரவுநேர வெப்பநிலை படிப்படியாக குறையத் தொடங்கும் என்பதைக் குறிக்கிறது என்றும் இது வானிலை மாற்றத்தின் முதல் அறிகுறிகளைக் குறிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் வானியல் சங்கத்தின் தலைவர் இப்ராஹிம் அல் ஜார்வான் கூறுகையில், “ஆகஸ்ட் 24 முதல் சுஹைல் நட்சத்திரம் முதன்முதலில் விடியற்காலையில் தெரியும், இது குறிப்பிடத்தக்க காலநிலை மாற்றத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. சுஹைலின் எழுச்சியைத் தொடர்ந்து, இப்பகுதியானது ஏறக்குறைய 40 நாட்களுக்கு ‘சுஃப்ரியா (Sufriya)’ எனப்படும் இடைநிலை வானிலையை அனுபவிக்கும், இது கடுமையான கோடைகாலத்திற்கும் குளிர்ந்த வெப்பநிலையின் தொடக்கத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஏற்ற இறக்கமான நிலைமைகளால் வகைப்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, ‘வாஸ்ம் (wasm)’ பருவம் தொடங்கும் அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து வானிலை படிப்படியாக சீராகும் என்றும், அதே நேரத்தில் சுஹைல் உதயமாகி சுமார் 100 நாட்களுக்குப் பிறகு குளிர்காலம் தொடங்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
‘ஏமனின் நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் சுஹைல் நட்சத்திரம், அரபு பாரம்பரியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. அதன் தோற்றம் தனித்துவமான ‘துரூர்’ நாட்காட்டியுடன் ஒத்துப்போகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இது ஆண்டை வெவ்வேறு கட்டங்களாகப் பிரிக்கிறது, ஒவ்வொன்றும் நூறு நாட்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel