UAE: பொது மன்னிப்பில் செல்பவர்கள் மீண்டும் திரும்ப முடியுமா?? அல்லது தடை விதிக்கப்படுமா..?? அதிகாரிகள் கூறுவது என்ன..??
அமீரகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பொது மன்னிப்பு திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பானது நாட்டில் ரெசிடென்ஸ் விசா விதிமீறலை புரிந்து தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த பொது மன்னிப்பின் மூலம் அவர்கள் தங்கள் விசா நிலையை முறைப்படுத்தி அபராதம் செலுத்தாமல் சொந்த ஊருக்கு பயணிக்க முடியும்.
அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி (ICP) அதிக காலம் தங்கியிருப்பவர்களுக்கான இரண்டு மாத கால அவகாசத்தில் உள்ள நடைமுறைகள் மற்றும் சம்பிரதாயங்களை விரைவில் விவரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்கள் பயணத் தடையை எதிர்கொள்வார்களா? அவர்கள் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்ப முடியுமா? என்ற சந்தேகங்கள் இருக்கலாம்.
இமிகிரேஷன் ஆலோசகர்களும் சமூக சேவையாளர்களும் சட்ட விரோதமாக வசிப்பவர்கள் இந்த பொது மன்னிப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர். மேலும் அவர்களின் விசா நிலை மாற்றப்பட்டவுடன் அவர்கள் எந்த தடையையும் எதிர்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறியுள்ளனர்.
இது குறித்து இமிகிரேஷன் ஆலோசகர் அலி சயீத் அல் காபி கூறுகையில் “பொதுமன்னிப்பின் மூலம் அமீரகத்தை விட்டு வெளியேறும் நபர் அமீரகத்திற்கு மீண்டும் வர தடையை எதிர்கொள்ள மாட்டார் மற்றும் அவர்களின் விசா நிலையை முறைப்படுத்திய பிறகு அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பலாம்” என்று கூறியுள்ளார். அத்துடன் “ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளின் இந்தத் திட்டம், விதிமீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், எதிர்காலத்தில் அவர்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் நாடு திரும்புவதை உறுதி செய்யவும் அனுமதிக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
அமீரகத்திற்கு மீண்டும் வருவதற்கான செயல்முறையை எவ்வாறு எளிதாக்குவது?
அமீரகத்திற்கு திரும்ப விரும்பும் பொது மன்னிப்புக் கோரிக்கையாளர்கள் அமீரகத்தை விட்டு வெளியே செல்வதற்கு முன், ரெசிடென்ஸ் விசா அல்லது ஐக்கிய அரபு அமீரக நிறுவனத்திடமிருந்து ஆஃபர் லெட்டரை பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது பற்றி அல் காபி கூறுகையில் “ஓவர்ஸ்டேயில் தங்கியிருப்பவர் தனது விசா நிலையை முறைப்படுத்த, நாட்டை விட்டு வெளியேறும் முன் ரெசிடென்ஸ் அனுமதியைப் பெறுவது நல்லது. இது அவர்கள் அமீரகத்திற்கு மீண்டும் வருவதற்கான செயல்முறையை சீராக மாற்ற உதவும்” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது ரெசிடென்ஸ் விசா விதியை மீறியிருப்பவர்கள் பொது மன்னிப்பிற்குப் பின் எந்த தடையையும் சந்திக்க மாட்டார்கள் என்றும் எந்த நேரத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் திரும்பலாம் என்றும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் கடைசி பொது மன்னிப்பின் போது, இவ்வாறு விதிகளை மீறி தங்கியிருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அமீரகத்திற்கு திரும்பி வருவதற்கான தடையை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த முறை கூடாரங்கள் இல்லை
இம்முறை, இமிகிரேஷன் அலுவலகங்களில் நியமிக்கப்பட்ட டெண்ட்கள் எனப்படும் கூடாரங்கள் மூலம் பொது மன்னிப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து செயல்பாடுகளுமே அமீரகம் முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் சென்டர்களில் கையாளப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த பொது மன்னிப்புக் காலத்துடன் ஒப்பிடும்போது செயல்முறையை எளிதாக்குகிறது என்றும் பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது பொது மன்னிப்பு பெற விரும்புபவர்கள் வரும் செப்டம்பர் 1 முதல் அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் சென்டர்களை அணுகி தங்கள் விண்ணப்பங்களைச் சேகரித்து சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு பிரச்சாரங்கள்
அமீரகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பொது மன்னிப்பு குறித்து இந்திய சமூகம் முழுவதுமாகத் தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்ய, ஷார்ஜாவில் உள்ள இந்திய சங்கம் விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத வசிப்பிடத்தை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த ஆலோசனைகளை வழங்க சங்கம் தங்கள் அலுவலகத்தில் ஒரு பிரத்யேக கவுன்டரையும் அமைக்கும் என்றும் பொது மன்னிப்பு காலம் முழுவதும் தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை உதவி மையம் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel