UAE: இலட்சக்கணக்கான மலர்கள் பூத்துக்குலுங்கும் துபாய் மிராக்கிள் கார்டன் இன்று முதல் மீண்டும் திறப்பு… தொடங்கிய புதிய சீசன்..!!
உலகின் மிகப்பெரிய மலர்த் தோட்டமான துபாய் மிராக்கிள் கார்டனில் (DMG) லட்சக்கணக்கான வண்ண மலர்கள் மீண்டும் பூத்துக் குலுங்குகின்ற நிலையில், இன்று (செப்டம்பர் 28, சனிக்கிழமை) பூங்காவின் 13வது சீசன் தொடங்கியுள்ளது. பூங்கா முழுவதும் கண்களைக் கவரும் வகையில் பல்வேறு வடிவமைப்பில் இருக்கும் பூக்களை கொண்ட துபாய் மிராக்கிள் கார்டன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி செல்லக்கூடிய ஒரு முக்கிய பொழுதுபோக்கு தலமாகும்.
இந்த சீசனில் அமீரகக் குடியிருப்பாளர்களுக்கு மலிவான டிக்கெட்டுகள் கிடைக்கும் என்று DMG நிர்வாகம் வெள்ளிக்கிழமை செய்தி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது. மிராக்கிள் கார்டன் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த ஆண்டு பூங்காவுக்கான நுழைவுக் கட்டணம் கடந்த ஆண்டின் விலையான 65 திர்ஹம்ஸிலிருந்து 5 திர்ஹம்ஸ் குறைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து அமீரகக் குடியிருப்பாளர்களும் தங்கள் எமிரேட்ஸ் ஐடியைக் காண்பிப்பதன் மூலம் தலா 60 திர்ஹம்ஸ் நுழைவுக் கட்டணத்தில் பூங்காவிற்குள் நுழையலாம் என கூறப்பட்டுள்ளது. வழக்கம் போல, மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக நுழையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சுற்றுலாப் பயணிகளுக்கு டிக்கெட் விலை கடந்த ஆண்டை விட 5 திர்ஹம்ஸ் அதிகரித்துள்ளது. அதன்படி, இப்போது பெரியவர்கள் தலா 100 திர்ஹம்ஸ் மற்றும் குழந்தைகள் தலா 85 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்தி டிக்கெட்களை வாங்கலாம்.
மேலும், அமீரகத்தில் வசிப்பவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் துபாய் மிராக்கிள் கார்டனுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 28 முதல் தொடங்கப்படும் என்பதையும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுமார் 72,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் 150 மில்லியனுக்கும் அதிகமான மலர்களால் மூடப்பட்ட வடிவமைப்புகளும் சிற்பங்களும் நிரம்பியுள்ளன. குறிப்பாக, இங்கு கின்னஸ் உலக சாதனையை முறியடிக்கும் எமிரேட்ஸ் ஏர்பஸ் A380 வடிவத்தில் உள்ள மலர் சிற்பம் பார்வையாளர்களை பிரம்மிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவை தவிர, பூங்காவில் படைப்புணர்வு மற்றும் இயற்கையின் அழகைக் கொண்டாடும் வகையில் அமைந்துள்ள ‘Umbrella Tunnel’ மற்றும் ‘Lake Park’ பார்வையாளர்களுக்கு அற்புதமான தருணங்களை விருந்தளிக்கும். துபாய்லாண்டில் (Dubailand) அமைந்துள்ள துபாய் மிராக்கிள் கார்டன் முதல் முறையாக காதலர் தினமான பிப்ரவரி 14, 2013 அன்று திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பூங்கா செயல்படும் நேரம்:
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்; மற்றும் வார இறுதி நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு) மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel