ADVERTISEMENT

சென்னையிலிருந்து 280 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில் திடீரென வெளியேறிய புகை!! விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு…!!

Published: 25 Sep 2024, 1:05 PM |
Updated: 25 Sep 2024, 1:08 PM |
Posted By: Menaka

தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து துபாய் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தாமதமாகியதாக விமான நிறுவனம் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. நேற்று மாலை புறப்படவேண்டிய விமானம் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாகி, நேற்று நள்ளிரவில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இது குறித்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், “செப்டம்பர் 24, 2024 அன்று சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் EK547, தொழில்நுட்பக் கோளாறால் தாமதமானது. பொறியியல் சோதனையைத் தொடர்ந்து, விமானம் துபாய்க்கு செல்ல அனுமதிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பயண தாமதத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு எமிரேட்ஸ் நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்பதாகவும், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 280 பயணிகளுடன் துபாய்க்கு பறக்கத் தயாராக இருந்த எமிரேட்ஸ் விமானத்தின் பின்புறத்தில் இருந்து திடீரென புகை வெளியேறியதால், விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியதை இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களில் காணமுடிகிறது.

பொதுவாக UAE-இந்தியா விமானப் பாதை மிகவும் பரபரப்பான விமான பாதைகளில் ஒன்றாகும். ஏராளமான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களில் 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

கூடுதலாக, துபாய் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. UAE மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள விமான நிறுவனங்கள் இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் போக்குவரத்துக்கு இடமளிக்கும் வகையில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடுத்து வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel