அமீரக செய்திகள்

UAE: அஜ்மானில் இருந்து குளோபல் வில்லேஜுக்கு புதிய பேருந்து சேவை..!! எப்போது முதல் தெரியுமா??

துபாயின் மிகவும் பிரபலமான பன்முகக் கலாச்சார இலக்கான குளோபல் வில்லேஜ் வருகின்ற அக்டோபர் 16 ஆம் தேதி புதிய சீசனுக்குத் திரும்பவுள்ள நிலையில், பூங்காவுக்கு செல்லும் புதிய பேருந்து சேவை அக்டோபர் 16 முதல் தொடங்கும் என்று அஜ்மான் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் நேற்று (திங்கள்கிழமை) அறிவித்துள்ளது.

குளோபல் வில்லேஜ் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்து சேவைக்கான டிக்கெட்டுகளின் விலை தலா 25 திர்ஹம்ஸ் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. குடியிருப்பாளர்கள் தங்கள் மசார் கார்டைப் (Masaar Card) பயன்படுத்தி இந்த குளோபல் வில்லேஜ் பயணத்தை அனுபவிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிவிப்பின் படி, மூன்று பேருந்துகள் அஜ்மானில் உள்ள அல்-முசல்லா நிலையத்திலிருந்து குளோபல் வில்லேஜுக்கும், மேலும் மூன்று பேருந்துகள் குளோபல் வில்லேஜிலிருந்து அஜ்மானுக்கும் புறப்படும் என்பது தெரிய வந்துள்ளது.

புதிய பேருந்து சேவையானது, அல்-முசல்லா நிலையத்திலிருந்து புறப்பட்டு குளோபல் வில்லேஜுக்கு செல்லும், மீண்டும் அங்கிருந்து அல் முசல்லா நிலையத்திற்குத் திரும்பும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அஜ்மானிலிருந்து சரியாக மதியம் 2.15 மணிக்கும் கடைசியாக மாலை 6.15 மணிக்கும் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வார நாட்களில் குளோபல் வில்லேஜிலிருந்து முதல் பயணம் பிற்பகல் 3.45 மணிக்கும், கடைசியாக நள்ளிரவு 12.30 மணிக்கும் புறப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வார இறுதியில், குளோபல் வில்லேஜிலிருந்து கடைசிப் பயணம் அதிகாலை 1.30 மணிக்குப் புறப்படும்.

வார நாட்களில் பேருந்து சேவையின் நேர அட்டவணை

  • அஜ்மானில் உள்ள அல் முசல்லா ஸ்டேஷன்: பிற்பகல் 2.15, மாலை 4.45 மற்றும் மாலை 6.15
  • குளோபல் வில்லேஜ்: மாலை 3.45 மணி, இரவு 10.30 மற்றும் நள்ளிரவு 12.30 மணி

வார இறுதி நாட்களுக்கான அட்டவணை:

  • அஜ்மானில் உள்ள அல் முசல்லா ஸ்டேஷன்: பிற்பகல் 2.15, மாலை 4.45 மற்றும் மாலை 6.15
  • குளோபல் வில்லேஜ்: மாலை 3.45 மணி, இரவு 10.30 மற்றும் நள்ளிரவு 1.30 மணி

கடந்த ஜூலை மாதம், அஜ்மானின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் ஒவ்வொரு நாளும் அஜ்மானில் இருந்து அபுதாபிக்கு பொதுப் பேருந்துகளை  மொத்தம் நான்கு பயணங்களாக இயக்கத் தொடங்கும் என்று அறிவித்திருந்தது.

அல் முசல்லா நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்து அபுதாபி பேருந்து நிலையத்திற்குச் சென்று மீண்டும் அல் முசல்லா நிலையத்திற்குத் திரும்பும். முதல் பேருந்து அஜ்மானிலிருந்து காலை 7 மணிக்கும் கடைசியாக இரவு 7 மணிக்கும் புறப்படும். அதேபோல், அபுதாபியில் இருந்து முதல் பயணம் காலை 10 மணிக்கும் கடைசி பயணம் இரவு 9.30 மணிக்கும் புறப்படும்.

பஸ் டிக்கெட்டின் விலை 35 திர்ஹம் மற்றும் பயணிகள் தங்கள் மசார் கார்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஒரு சமூக ஊடக இடுகையில், பயணிக்கும் பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அபுதாபி பாதையில் பஸ் ரூட்களை அதிகரித்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

குளோபல் வில்லேஜ் டிக்கெட் பேக்குகள்

குளோபல் வில்லேஜ் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரையறுக்கப்பட்ட விஐபி பேக்குகளை வாங்கினால், அங்குள்ள சவாரிகள், இடங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் பார்க்கிங் ஆகியவற்றுக்கான விஐபி அணுகலைப் பெற முடியும். VIP பேக்குகளின் விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

  • 4,745 திர்ஹம்ஸ் மதிப்புள்ள மெகா கோல்ட் பேக் (Mega Gold Pack): குளோபல் வில்லேஜ் கோல்ட் விஐபி பேக் துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் அல்டிமேட் பிளாட்டினம் பிளஸ் வருடாந்திர பாஸ் (Global Village Gold VIP pack + Dubai Parks and Resorts Ultimate Platinum Plus Annual Pass)
  • 3,245 திர்ஹம்ஸ் மதிப்புள்ள மெகா சில்வர் பேக் (Mega Silver Pack): குளோபல் வில்லேஜ் சில்வர் விஐபி பேக் துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் அல்டிமேட் பிளாட்டினம் வருடாந்திர பாஸ் (Global Village Silver VIP pack + Dubai Parks and Resorts Ultimate Platinum Annual Pass)

இந்த பேக்குகள் துபாய் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்ஸிற்கான அல்டிமேட் பிளாட்டினம் மற்றும் வருடாந்திர பாஸுடன் வருகின்றன.

மேலும், கிளாசிக் VIP பேக்குகள் டயமண்ட் VIP பேக்குடன் திரும்பி வந்துள்ளது, இதை 7,350 திர்ஹம்களுக்கு வாங்கலாம், அதே நேரத்தில் பிளாட்டினம் பேக் 3,100 திர்ஹம்களுக்கு விற்பனை செய்யப்படும். கோல்டு பேக்கின் விலை 2,350 திர்ஹம் மற்றும் சில்வர் பேக் ஒவ்வொன்றும் 1,750 திர்ஹம்களாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!