துபாயில் பஸ் ரூட் மாற்றம்.. அல் மக்தூம் பிரிட்ஜின் பராமரிப்பு பணிகளால் மாற்றம் என RTA அறிவிப்பு..!!
துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பில், அல் மக்தூம் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக எமிரேட்டில் சில பேருந்து வழித்தடங்கள் தற்காலிகமாக திருப்பி விடப்படும் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக RTA வெளியிட்ட அறிவிப்பில், 10, 23, 27, 33, 88, C04, C05, C10, C26, E16, X28 மற்றும் X94 ஆகிய பேருந்து வழித்தடங்கள் செப்டம்பர் 29, 2024 முதல் ஜனவரி 23, 2025 வரை குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்கள் வழியாகச் செல்லாது மற்றும் அல் மக்தூம் பாலம் வழியாக செல்லும் பேருந்துகள் அல் கர்ஹூத் பாலம் வழியாக தற்காலிகமாக திருப்பி விடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
RTAவின் அறிவிப்பின் படி, அல் மக்தூம் பாலம் ஜனவரி 16, 2025 வரை பகுதி செயல்பாட்டு நேரத்தைக் கடைப்பிடிக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. துபாயின் இந்த முக்கிய பாலம் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் 24 மணி நேரம் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பேருந்து வழித்தடங்கள் திருப்பி விடப்படும் காலத்தில் பின்வரும் பேருந்து நிறுத்தங்கள் வழியாகச் பேருந்து செல்லாது:
- Dnata 1
- Dnata 2
- சிட்டி சென்டர் மெட்ரோ பஸ் ஸ்டாப் 1-1
- ஓத் மேத்தா பஸ் ஸ்டேஷன் 7
- உம் ஹுரைர், சாலை 2
- ரஷித் மருத்துவமனை ரவுண்டானா 1
அதேபோல், ரூட் 23ல் உள்ள சேவை தேரா சிட்டி சென்டர் பேருந்து நிலையத்தில் தொடங்கும் மற்றும் முடிவடையும் மற்றும் ஓத் மேத்தா பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு சேவை செய்யாது. RTA அதன் S’hail செயலி மூலம் மேற்கூறிய போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel