துபாய்: கடுமையான போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்.. மணிக்கணக்கில் நெரிசலில் காத்திருக்க வேண்டியிருப்பதாக வேதனை…!!

துபாயில் உள்ள அலுவலகங்கள் மற்றும் வணிக மையங்களைச் சுற்றிலும் வாகனங்களின் போக்குவரத்து அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், குடியிருப்பாளர்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களை அடைய 30 நிமிடங்களுக்கு மேல் ஆவதாக கவலை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, பிசினஸ் பே, DIFC மற்றும் தேரா உள்ளிட்ட பல வணிக பகுதிகளில் தினசரி மணிக்கணக்கில் போக்குவரத்து தாமதத்தை எதிர்கொள்வதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பீக் ஹவர்ஸில் பார்க்கிங்கிலிருந்து வெளியே வருவதற்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆகி விடுவதாகவும், பார்க்கிங்குடன் இணைக்கும் சாலைகளில் முன்னோக்கி செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்துச் செல்வதாகவும் பிசினஸ் பேயில் உள்ள அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கூறுகின்றனர்.
அதே போல் பல இடங்களில் ஒரே ஒரு நுழைவு மற்றும் எக்ஸிட் இருப்பதால், பல குடியிருப்பு சமூகங்கள் எவ்வாறு போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று குடியிருப்பாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்பொழுது அலுவலகங்கள் மற்றும் வணிகங்கள் நிறைந்த பகுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள், பல நுழைவு மற்றும் எக்ஸிட் புள்ளிகள் இருந்தபோதிலும், தாங்கள் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கூறியிருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
துபாயில் உள்ள அல் கைல் சாலை அல்லது பிற விரைவுச் சாலைகளுக்குச் செல்ல 25 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்வதாகவும், பின்னர் அல் நஹ்தாவில் உள்ள குடியிருப்புக்கு செல்ல 40 நிமிடங்கள் ஆவதாகவும் இந்தப் பகுதிகளுக்கு வழக்கமாகப் பயணிக்கும் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், புதிய உள்கட்டமைப்பு மேம்படுத்தல்கள் மற்றும் முன்மொழியப்பட்ட தீர்வுகள் இறுதியாக நகரத்தின் போக்குவரத்து பிரச்சினைகளுக்கு மிகவும் தேவையான சில நிவாரணங்களைக் கொண்டுவரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில், DIFCயில் போக்குவரத்து மிகவும் மோசமாகிவிட்டது என்று குறை கூறும் குடியிருப்புவாசிகள், முன்பு காலை 8.30 மணியளவில் தொடங்கும் போக்குவரத்து நெரிசல், இப்போது அதிகாலை 5.30 மணிக்கே தொடங்கி விடுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
சில நாட்களில், DIFC பார்க்கிங்கிலிருந்து அபுதாபி நோக்கி செல்லும் ஷேக் சையத் சாலை வரையிலான 2-3 கிலோமீட்டர் தூரத்தை கடப்பதற்காக ஒன்றரை மணிநேரத்திற்கு மேல் செலவிட வேண்டிய இக்கட்டான நிலையும் ஏற்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், துபாய் வேர்ல்டு ட்ரேட் சென்டரில் நிகழ்வுகள் நடக்கும்போது போக்குவரத்து நெரிசல் தாங்க முடியாததாகிறது என்றும், இதனால் அடிக்கடி வாகனம் ஓட்டுவதற்குப் பதிலாக மெட்ரோவைத் தேர்வுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.
பிசினஸ் பேயில் அல் அமல் ஸ்ட்ரீட்டில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், ஷேக் சையத் சாலை அல்லது அல் கைல் சாலையை அணுக 40 நிமிடங்கள் எடுத்துக் கொள்வதாகக் கூறுகிறார், இது போக்குவரத்து இல்லாமல் ஐந்து நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்பதையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஸ்ட்ரீட்டில் பல்வேறு கோபுரங்களில் நூற்றுக்கணக்கான அலுவலகங்கள் இருக்கும் நிலையில், மாலையில் அனைத்து ஊழியர்களும் வேலை முடிந்து ஒரே நேரத்தில் வெளியேறுவதே நெரிசலுக்கு காரணம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இருப்பினும், அல் கைல் சாலையில் மேற்கொள்ளப்படும் புதிய உள்கட்டமைப்பு திட்டங்கள் போக்குவரத்து ஓட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிசினஸ் பே மற்றும் DIFCயைப் போலவே, தேராவில் உள்ள பனியாஸ் ஸ்ட்ரீட்டிலும் தினசரி இதேபோன்ற சூழ்நிலை ஏற்படுவதாக சிலர் தெரிவிக்கின்றனர். தேராவில் காலை 9 மணிக்குப் பிறகு நிலைமை மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel