துபாய் சாலை மேம்பாடு: அல் கைல் சாலையில் நான்காவது புதிய பாலம் திறக்கப்படுவதாக RTA அறிவிப்பு..!!

துபாயில் உள்ள அல் மேதான் ஸ்ட்ரீட் மற்றும் ராஸ் அல் கோர் ஸ்ட்ரீட் இன்டர்செக்சன் இடையே தேராவை நோக்கிச் செல்லும் 610 மீட்டர் நீளமுள்ள புதிய இருவழிப் பாலம் அக்டோபர் 13ம் தேதி திறக்கப்பட உள்ளதாக எமிரேட்டின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.
துபாயின் மிகவும் பரபரப்பான அல் கைல் சாலையில் உள்ள நான்காவது பாலம் இதுவாகும். இது 3,300-மீட்டர் நீளமுள்ள பாலங்கள் மற்றும் 6,820 மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள பாதைகளை விரிவுபடுத்தும் முக்கிய அல் கைல் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக திறக்கப்படுகிறது. அத்துடன் இன்று (சனிக்கிழமை) புதிய பாலத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து RTAவின் போக்குவரத்து மற்றும் சாலைகள் ஏஜென்சியின் இயக்குநர் ஹமத் அல் ஷெஹி செய்தி ஊடகங்களிடம் பேசிய போது, அக்டோபர் 13ஆம் தேதி திறக்கப்படும் புதிய பாலம் ஒரு மணி நேரத்திற்கு 3,200 வாகனங்கள் வரை அனுமதிக்கும் என்றும், மெய்டன் ஸ்ட்ரீட்டில் இருந்து அல் கைல் சாலையிலிருந்து தேராவை நோக்கி போக்குவரத்தை இணைக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அல் கைல் சாலையில் இருந்து ராஸ் அல் கோர் தெருவை நோக்கி போக்குவரத்தை இணைக்கும் வகையில், சுமார் 1,550 மீட்டர் பரப்பளவில் மேற்பரப்பு சாலை மேம்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிதாக திறக்கப்படவுள்ள இந்த பாலம் போக்குவரத்து நெரிசல்கள் அல்லது வாகன ஓட்டிகள் ஒரு பாதையில் இருந்து பக்கத்து பாதைக்கு சாய்வாகச் செல்வது போன்ற போக்குவரத்து சிக்கல்களைத் தீர்க்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. RTAவின் அறிவிப்பின் படி, இப்போது தேராவை நோக்கிச் செல்பவர்களுக்குத் தனிப் பாதைகள் மற்றும் ராஸ் அல்கோருக்குச் செல்பவர்களுக்கு வேறு பாதைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பயண நேரம் குறைப்பு
அல் கைல் சாலை மேம்பாட்டுத் திட்டமானது, அல் கைல் சாலையில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கவும், அல் கைல் சாலையைக் கடக்கும் மேம்பாலங்களில் போக்குவரத்து நெரிசலை அகற்றவும், தற்போதைய சந்திப்புகள் மற்றும் பாலங்களின் திறனை ஒரு மணி நேரத்திற்கு சுமார் 19,600 வாகனங்களாக விரிவுபடுத்தவும் மற்றும் பயண நேரத்தை 30 சதவீதம் குறைக்கவும் செய்யும் என்று அல் ஷெஹி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “அல் கைல் சாலை துபாயில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும், இது துபாயின் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்து வருகிறது, மேலும் ஒவ்வொரு நாளும் 300,000 க்கும் மேற்பட்ட வாகனங்களால் பயன்படுத்தப்படுகின்றன” என்று கூறியுள்ளார்.
இந்த மெகா-திட்டம் அல் கைல் சாலையில் ஜாபீல், மேதான், அல் கூஸ் 1, அல் ஜடாஃப், கதீர் அல் தைர் மற்றும் ஜுமைரா வில்லேஜ் டிஸ்ட்ரிக்ட் உட்பட ஏழு பகுதிகளில் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மாதங்களுக்குள் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டதால், திட்டத்தின் வேகமான திருப்பத்தையும் அல் ஷெஹி குறிப்பிட்டார்.
அல் கைல் சாலையில் இருந்து பைனான்சியல் சென்டர் ஸ்ட்ரீட் வரை ஷேக் சையத் சாலையை நோக்கி போக்குவரத்தை இணைக்கும் வகையில் ஜாபீலில் உள்ள பாலம் உட்பட மூன்று பாலங்கள் பொதுமக்களுக்கு சமீபத்தில் திறக்கப்பட்டன.
அல் கூஸ் 1ல் உள்ள இரண்டாவது பாலம், அல் கைல் சாலையில் இருந்து அல் வஹா ஸ்ட்ரீட் மற்றும் லதிஃபா பின்ட் ஹம்தான் ஸ்ட்ரீட் வரை போக்குவரத்தை இணைக்கிறது; மற்றும் ஹெஸ்ஸா மற்றும் அல் கமிலா ஸ்ட்ரீட்களின் சந்திப்புகளுக்கு இடையில் உள்ள மூன்றாவது, ஜுமேரா வில்லேஜ் டிஸ்ட்ரிக்ட் சமூகத்திற்கு சேவை செய்கிறது.
மேலும், ஐந்து பாலங்களில் கடைசி பாலம் அடுத்த வாரம் திறக்கப்படும் என்று அல் ஷெஹி தெரிவித்துள்ளார். இது லதிஃபா இன்டர்சேஞ்ச் மற்றும் மேதான் இன்டர்சேஞ்ச் இடையே அமைந்துள்ளது, மேலும் அல் கைல் சாலை மேம்பாட்டுத் திட்டத்தை இது நிறைவு செய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel