22 வருட போராட்டம்.. 7.3 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம்.. பொதுமன்னிப்பில் நாடு திரும்பிய இந்தியர்..!!
ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் காலாவதியான விசாவுடன் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்கள் தங்களின் நிலையை சட்டப்பூர்வமானதாக மாற்றுவதற்கு பொது மன்னிப்பு வழங்கி கால அவகாசத்தை வழங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் துவங்கிய இந்த பொது மன்னிப்பால் அமீரகத்தில் சட்டப்பூர்வமாக தங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் பயன்பெற்றனர். அக்டோபர் 31ம் தேதியுடன் முடிவடையவிருந்த இந்த பொது மன்னிப்பை அமீரக அரசானது வெளிநாட்டவர்களின் நலனில் அக்கறை கொண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டித்துள்ளது.
இந்த பொது மன்னிப்பால் தனிநபர்கள், குடும்பத்தினர்கள் என அமீரகத்தில் கஷ்டங்களை அனுபவித்து வந்த பலர் சட்ட ரீதியாக தங்களின் விசா நிலையை மாற்றிக்கொண்டோ அல்லது விசா முடிவடைந்து விட்டதால் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்த பலரும் பொது மன்னிப்பை பயன்படுத்தி தங்களின் நாட்டிற்கு சென்றோ வருகின்றனர்.
அவர்களில் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ஈடா ரத்னா குமாரி என்ற இந்தியர் அமீரகத்தின் விசா பொது மன்னிப்பின் கீழ் பயனடையும் மிகப்பெரிய பயனாளிகளில் ஒருவராகியுள்ளார். இவர் சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது தாய் நாட்டிற்குச் சென்று தனது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளை சந்தித்துள்ளார் என்பது பலருக்கும் ஆச்சரியம் அளித்ததோடு மட்டுமல்லாமல் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த 72 வயதான குமாரி, அமீரகத்தில் இருபது வருடங்களுக்கும் மேலாக வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்திருக்கிறார். அவர் செய்த விசா விதிகளை மீறி அமீரகத்தில் தங்கியதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகை அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இப்போது, அமீரக அரசாங்கம் விசா பொது மன்னிப்பு திட்டத்தை அறிவித்ததால், அதிகாரிகள் அவரது 730,000 திர்ஹம்ஸ்க்கும் அதிகமான அபராதத்தை தள்ளுபடி செய்துள்ளனர். இந்த அபராத விலக்கு பெற்று பொது மன்னிப்பு திட்டத்தை பயன்படுத்தி அவர் 22 வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeஇது குறித்து செய்தி ஊடகங்களிடம் பேசிய குமாரி, 1996 இல் அபுதாபி விசாவுடன் அமீரகத்தில் வந்திறங்கியதாகவும், முதல் ஐந்து ஆண்டுகளில் இரண்டு முறை வீட்டிற்குச் சென்றிருந்ததாகவும் கூறினார், அதன் பிறகு தாயகத்திற்கு போகவே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குமாரி எப்படி ஒரு சட்டவிரோத குடியிருப்பாளராக மாறினார்?
தன்னை தவறாக நடத்தியதாகக் கூறி, தனது முதலாளிகளை விட்டு வெளியேறிய பிறகு, தான் ஒரு சட்டவிரோத குடியிருப்பாளராக மாறியதாக குமாரி தெரிவித்துள்ளார். அவரது விசா 2002 இல் காலாவதியாகி இருக்கின்றது. இருப்பினும், அவரது கணவர் இறந்துவிட்டதாலும், தனது மூன்று குழந்தைகளை வளர்க்க அமீரகத்தில் தங்குவதைத் தவிர வேறு வழியில் என்பதாலும், துபாயில் பல வீடுகளில் பகுதி நேரமாக வேலை செய்து இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனை வளர்த்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசிய போது, “நான் என் கடமைகளை நிறைவேற்றிவிட்டேன். இப்போது, நான் வீட்டிற்கு செல்லலாம். இந்த நாட்டுக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை” என்று நெகிழ்ந்து கூறியதுடன் அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்ததற்காகவும், சட்டப்பூர்வ தண்டனை ஏதுமின்றி நாட்டை விட்டு வெளியேற அனுமதித்ததற்காகவும் அதிகாரிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அதேசமயம், பொது மன்னிப்பு நடைமுறைகளில் தனக்கு உதவிய சமூக தன்னார்வலர்களுக்கும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
குமாரியின் பொதுமன்னிப்பு செயல்முறை
பொது மன்னிப்பு நடைமுறைகளில் தூதரகத்தை ஆதரிக்கும் சமூகக் குழுவான Aim India Forum (AIF) இன் நிறுவனர் தலைவரான ஷேக் முசாஃபர், குமாரியின் விண்ணப்பத்தை செயல்படுத்துவதற்கு சமூக தன்னார்வலர்கள், தூதரகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் எவ்வாறு இணைந்து பணியாற்றினார்கள் என்பதை விளக்கியுள்ளார்.
அமீரக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு வசதியைப் பெறுவதற்காக குமாரி தூதரகத்தை அணுகியபோது, சுமார் 20 வருடம் பழமையான அவரது பாஸ்போர்ட்டின் கையால் எழுதப்பட்ட நகலைத் தவிர ஒரு துண்டு காகிதமும் அவரிடம் இல்லை. மேலும், அவர் தொடர்பான எந்த ஆவணங்களையும் அவர்களால் கண்காணிக்க முடியவில்லை.
இருப்பினும், அவரது விசா அபுதாபியில் வழங்கப்பட்டதால், அபுதாபியின் இமிகிரேஷனில் உள்ள சில அதிகாரிகளை தொடர்பு கொண்டதாகவும், அவர்களின் உதவியுடன், குமாரியின் UID எண்ணையும், அதனுடன் தொடர்புடைய அபராதத் தொகையையும் பெற முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார். ஒட்டு மொத்தமாக 7,895 நாட்கள் அதிகமாக நாட்டில் தங்கியதற்காக மொத்தம் 73,2450 திர்ஹம்ஸ் அபராதத்தை அவர் பெற்றிருக்கிறார்.
பின்னர், 48 மணி நேரத்தில் காவல்துறையிடம் இருந்து தொலைந்த பாஸ்போர்ட் அறிக்கைக்கு விண்ணப்பித்து பெற்றதாகவும், தொடர்ந்து அவசரச் சான்றிதழுக்கு (EC) விண்ணப்பத்ததாகவும் முசாஃபர் கூறியுள்ளார். EC என்பது அவுட்பாஸ் என்றும் அழைக்கப்படும், இது இந்தியாவுக்குப் பயணம் செய்வதற்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருக்காதவர்களுக்கு வழங்கப்படும் ஒரு முறை பயண ஆவணமாகும்.
அதையடுத்து, அபுதாபி இமிகிரேஷன் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவரின் எக்ஸிட் பெர்மிட்டுக்கு விண்ணப்பித்தபோது, அது இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்குள் வழங்கப்பட்டதாகவும், மேலும் அவசரச் சான்றிதழைப் பெற்ற இரண்டு மணி நேரத்திற்குள் குமாரியின் அபராதத்தை அகற்ற முடிந்ததாகவும் அவர் விவரித்துள்ளார்.
தூதரகம் வெளியிட்ட அறிக்கை
இது தொடர்பாக இந்திய தூதரகம் செய்தி ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில், “செல்லுபடியாகும் விசா இல்லாததால் பல ஆண்டுகளாக இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்ப முடியாத பல வழக்குகளை தூதரகம் பெற்றுள்ளது. அமீரக அரசாங்கம் வழங்கிய பொதுமன்னிப்புக்கு நன்றி, அவர்கள் இப்போது தங்கியிருப்பதை சட்டப்பூர்வமாக்கிக் கொண்டு இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பங்களுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு கிடைத்தது” என்று தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து இந்திய குடிமக்களும் அமீரக விசா விதிகளை கடைபிடிக்குமாறும், பொதுமன்னிப்பின் பலன்களைப் பெறுவதற்கு தூதரகத்தின் உதவி தேவைப்பட்டால், அவர்கள் காலக்கெடுவிற்கு முன் தூதரகத்திற்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
கடந்த வாரம், ஐக்கிய அரபு அமீரகத்தின் விசா பொதுமன்னிப்பின் சேவைகளை நாடிய 10,000 இந்தியர்களுக்கு வசதி செய்துள்ளதாக இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. அதில் 1,700 அவசரகால சான்றிதழ்கள், 1500 வெளியேறும் அனுமதிகள் (exit permits) அடங்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் 1,300 குறுகிய செல்லுபடியாகும் பாஸ்போர்ட்கள் அமீரகத்தில் மீண்டும் தங்குவதற்கு விருப்பப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel