ADVERTISEMENT

துபாயில் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வதை நிரந்தரமாக்க முயற்சி..!! நிறுவனங்களை ஊக்குவிக்கும் அதிகாரிகள்..!!

Published: 21 Nov 2024, 7:18 PM |
Updated: 22 Nov 2024, 11:12 AM |
Posted By: Menaka

துபாயில் நாளுக்குநாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதைச் சமாளிக்க சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் உட்பட பல்வறு நடவடிக்கைகள் துபாய் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக எமிரேட் முழுவதும் நெகிழ்வான வேலை நேரம் மற்றும் தொலைதூர பணி கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் போக்குவரத்தை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளையும் துபாய் செயல்படுத்துகிறது. ஆகவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசு மற்றும் தனியார் துறையினர் இந்த நடைமுறைகளை பின்பற்ற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் துபாய் அரசு மனிதவளத் துறை (DGHR) ஆகியவை சமீபத்தில் மேற்கொண்ட இரண்டு ஆய்வுகளின் முடிவுகளை அறிவித்த நிலையில் இது வந்துள்ளது. முதல் கணக்கெடுப்பு 320,000 ஊழியர்களைக் கொண்ட 644 நிறுவனங்களை உள்ளடக்கியது, இரண்டாவது கணக்கெடுப்பு தனியார் துறையைச் சேர்ந்த 12,000 ஊழியர்களை ஆய்வு செய்தது.

அதிகாரிகள் இவ்விரண்டு ஆய்வுகளை மேற்கோள் காட்டி, இரண்டு மணி நேர ஸ்டார்ட் விண்டோ (start window), தொலைதூர வேலை போன்ற நெகிழ்வான வேலை நேரத்தை செயல்படுத்துவது, ஒரு மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து வேலை நாட்கள் வரை இத்தகைய நெகிழ்வான நேரத்தை வழங்குவதன் மூலம், துபாய் முழுவதும் காலை நேர பீக்ஹவர்ஸ் (peak hours) எனும் சொல்லக்கூடிய போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் காணப்படும் நெரிசல் 30 சதவீதம் குறையும் என்று தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

உதாரணமாக, 20 சதவீத ஊழியர்கள் தொலைதூரத்தில் பணிபுரிந்தால், ஷேக் சையத் சாலையில் போக்குவரத்து 9.8 சதவீதமும் அல் கைல் சாலையில் 8.4 சதவீதமும் குறையும். கூடுதலாக, நெகிழ்வான வேலை நேரம் செயல்படுத்தப்பட்டால் ஷேக் சையத் சாலையில் 5.7 சதவீதமும், அல் கைல் சாலையில் 5 சதவீதமும் போக்குவரத்து அளவைக் குறைக்கலாம் என்று அதிகாரிகள் ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

துபாய் எமிரேட்டில் 32 சதவீத தனியார் நிறுவனங்கள் தற்போது ரிமோட் ஒர்க் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதாகவும், மேலும் 58 சதவீதம் பேர் அவற்றை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கூடுதலாக, 31 சதவீத நிறுவனங்கள் நெகிழ்வான வேலை நேரத்தை செயல்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT

கடந்த மே மாதம் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது அவர்கள், போக்குவரத்து ஓட்டத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததால் இந்த ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

துபாயில் உள்ள பெருவாரியான அலுவலகங்கள் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் ஊழியர்களுக்கு தொலைதூர வேலையைச் செயல்படுத்த டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. அதே போல் இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் அமீரகம் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனியார் மற்றும் அரசு துறை அலுவலகங்கள் ஆன்லைனில் இயங்கிய நிலையில் அவசரநிலைகளுக்கான விருப்பத்தை முதலாளிகள் தக்க வைத்துக் கொண்டனர்.

இது குறித்து DGHR துறையின் பொது இயக்குனர் அப்துல்லா அலி பின் சையத் அல் ஃபலாசி பேசிய போது, பெரும்பாலான அரசு நிறுவனங்களில் கார்ப்பரேட் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக ‘ரிமோட் ஒர்க் சிஸ்டம்’ மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.

மேலும், சில நிறுவனங்கள் தொலைதூர வேலையைத் தேர்ந்தெடுக்க ஊழியர்களுக்கு வருடத்திற்கு பல நாட்கள் அனுமதிக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், சில அரசு அமைப்புகள் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை வேலையைத் தொடங்குவதில் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதால் காலை மற்றும் மாலை பீக் நேரங்களில் ஊழியர்கள் பணியிடத்திற்குச் சுமூகமாக சென்று வர முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த  நிறுவனங்களில் 80 சதவிகிதம் ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் தொலைதூரத்தில் வேலை செய்யும் வாய்ப்பு வழங்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன. கூடுதலாக, துபாய் அரசாங்க ஊழியர்களில் 87 சதவிகிதத்தினர் தங்கள் தனிப்பட்ட தேவைகளுடன் நெகிழ்வான வேலை நேரம் ஒத்துப் போவதாக உணர்கிறார்கள், அதே நேரத்தில் 89.4 சதவிகிதத்தினர் மணிநேரங்கள் தங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்கின்றன என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

மேலும், 80.4 சதவீதம் பேர் தொலைதூரத்தில் பணிபுரியும் போது தங்கள் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதாகவும், 90 சதவீதம் பேர் உடன் பணிபுரிபவர்கள் அல்லது மேலாளர்களுடனான தொடர்பு அல்லது இணைப்பில் எந்தப் பிரச்சினையையும் தெரிவிக்கவில்லை என்றும் கணக்கெடுப்பு காட்டுகிறது.

துபாயின் உள்கட்டமைப்பு, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் நல்வாழ்வுக்கான கமிஷனர் ஜெனரல் மேட்டர் அல் டேயர், தொலைதூர வேலை மற்றும் நெகிழ்வான நேரம் ஆகியவை துபாயின் போக்குவரத்து தேவை மேலாண்மை கொள்கைகளில் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கொள்கைகளில் டிரக் இயக்கக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்துதல், பேருந்துகள் மற்றும் டாக்ஸிகளுக்கான பிரத்யேகப் பாதைகளை அதிகரிப்பது மற்றும் தனியார் வாகனங்களுக்குப் பதிலாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க சலுகைகளை வழங்குதல் ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel