துபாயில் வரவிருக்கும் ‘டிராக் இல்லாத டிராம்’.. நகரம் முழுவதும் எட்டு இடங்களில் அமைக்க திட்டம்..!! துபாய் இளவரசர் உத்தரவு..!!
அனைத்து துறைகளிலும் நவீனங்களை புகுத்தி வரும் துபாயானது போக்குவரத்து துறையிலும் பல்வேறு புதுமைகளை தற்பொழுது புகுத்தி வருகின்றது. பொதுவாக துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் துபாய்க்கு வரும் சுற்றுலாவாசிகள் என அனைவரையும் கவரும் ஒரு விஷயமாக துபாய் டிராம் இருக்கின்றது. இதற்கென தனி டிராக் (track) சாலை ஓரத்தில் மட்டுமல்லாமல் வாகனங்கள் செல்லும் சாலையின் குறுக்கேயும் இருப்பதால் இந்த டிராம் செல்லும் போது அனைவரின் கவனத்தையும் இருக்கின்றது. இது ஒருபுறமிருக்க துபாய் டிராமில் தற்பொழுது புதியதொரு மாற்றத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
துபாயின் பட்டத்து இளவரசரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரும், துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், நகரின் எட்டு இடங்களில் டிராக் இல்லாமல் செல்லக்கூடிய ‘டிராக்லெஸ் டிராம்’ (trackless tram) திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ளுமாறு சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்திற்கு (RTA) உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின் படி, பிரத்யேக பாதைகளில் கேமரா-வழிகாட்டப்பட்ட வர்ணம் பூசப்பட்ட கோடுகளைப் பயன்படுத்தி விர்ச்சுவல் டிராக்குகளில் செயல்படும் செல்ஃப் டிரைவிங் டிராம் அமைப்பை ஆணையம் ஆய்வு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான விபரங்களின் படி, மின்சாரத்தால் இயக்கப்படும் இந்த டிராம், சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் தன்னாட்சி அமைப்பு என்பதால் பாரம்பரிய டிராம்களுடன் ஒப்பிடும்போது குறைந்த செலவு மற்றும் வேகமான கட்டுமானத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு டிராமிலும் 300 பயணிகள் செல்லக்கூடிய மூன்று கேரேஜ்கள் இருக்கும் என்றும், அதிகபட்சம் மணிக்கு 70 கிமீ, மற்றும் இயக்க வேகம் 25 முதல் 60 கிமீ / மணி வரை வேகத்தில் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை இந்த டிராமால் பயணிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe
இதற்கிடையில், அபுதாபியில், பேருந்து மற்றும் டிராம் ஆகியவற்றின் கலவையான ஆட்டோமேட்டட் ரேபிட் டிரான்சிட் (ART) சேவை, நகரின் தெருக்களில் வந்துள்ளது. இந்த வாகனம் டிராக் இல்லாமல் இயங்கும். அத்துடன் இது புதுமையான மின்சார வாகனம் 200 பயணிகளுக்கு இடமளிக்கும், நகரத்தில் நிலையான இயக்கத்தை மேம்படுத்துகிறது.
ரீம் ஐலேண்டை மெரினா மாலுடன் இணைக்கும் இந்த எலெக்ட்ரிக் டிராக்லெஸ் டிராம் சேவை, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது, தலைநகரில் 14 நியமிக்கப்பட்ட நிறுத்தங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள ‘டிராக்லெஸ் டிராம்’ திட்டம் துபாய் டிராம் செயல்பட தொடங்கி 10வது ஆண்டு நிறைவடைந்திருக்கும் நிலையில் இதற்கான சிறப்பு விழாவின்போது வெளியாகியுள்ளது. மேலும் RTAவின் தலைமையகத்திற்கு வருகை புரிந்த அல் மக்தூம், “துபாய் அதன் உள்கட்டமைப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தும், விரைவான வளர்ச்சியைத் தூண்டும் மற்றும் அதன் மக்களின் வாழ்க்கையை வளப்படுத்தும்” என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், RTA இன் 16 பில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பீட்டிலான 2024-2027 பிரதான சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் மதிப்பாய்வு செய்தார், இது பொது மற்றும் பகிரப்பட்ட போக்குவரத்தில் ஆணையத்தின் முன்னேற்றத்துடன் கூடுதலாக 22 முக்கிய திட்டங்களைக் கொண்டுள்ளது. துபாயின் இந்த முன்முயற்சிகள் அனைத்தும் சுமார் 2.2 மில்லியனுக்கும் அதிகமான தினசரி பயணிகளுக்கு சேவை தரம் மற்றும் செயல்திறனை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் புதிய சாலை பாதைகள், டிராம்கள் மற்றும் செல்ஃப் டிரைவிங் பேருந்துகள் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றை பற்றிய விபரங்களை கீழே காணலாம்.
பிரத்யேக பஸ் மற்றும் டாக்ஸி பாதைகள்
RTAவின் புதிய திட்டம் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் பிரத்யேக பேருந்து மற்றும் டாக்ஸி பாதைகளின் விரிவாக்கத்தை மேற்பார்வையிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கம் 13 கி.மீ.க்கு ஆறு வழித்தடங்களைச் சேர்க்கும் என்றும், பாதைகளின் மொத்த நீளத்தை 20 கி.மீ.க்கு நீட்டிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த பாதைகள் பயணிகளின் எண்ணிக்கையை 10 சதவீதம் அதிகரிக்கவும், பேருந்து வருகையை 42 சதவீதம் அதிகரிக்கவும், பேருந்து பயண நேரத்தை 41 சதவீதம் குறைக்கவும், பொது போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
துபாயின் செல்ப் டிரைவிங் போக்குவரத்து உத்தி 2030க்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த பிரத்யேக பாதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பாதைகள் தன்னாட்சி மற்றும் மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை ஆதரிக்கும் என்றும் RTA தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் சைக்கிளிங் டிராக்குகள் ஸ்கேனிங்
இவை தவிர, ஒரு ஸ்மார்ட் சைக்கிளிங் டிராக் அமைப்பும் வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இது 557 கிலோமீட்டர்கள் முழுவதும் பரவி, ஆண்டுதோறும் 44 மில்லியன் சைக்கிளிங் பயணங்களை ஆதரிக்கிறது, மேலும் 2.3 மில்லியன் சாஃப்ட் மொபிலிட்டி பயணங்களையும் வழங்குகிறது.
பாதுகாப்பான பயணம்
துபாயின் ஒரு புதிய முயற்சி பொதுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு மீறல்கள் குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை செய்யும் என கூறப்படுகின்றது. ‘கிரீன் ரோடு’ எனும் புதிய அமைப்பானது துபாயில் இயங்கக்கூடிய 1,395 பொது போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஓட்டுநர்களின் நடத்தைகளை கண்காணிக்கும் என்றும், இதில் திடீர் திருப்பங்கள், வேகம், திடீர் பிரேக்கிங், லேன் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பற்ற வேகம் ஆகியவை அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பு பாதுகாப்பை 54 சதவீதம் மேம்படுத்தியுள்ளதாகவும், ஆபத்து மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை 47 சதவீதம் குறைத்துள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel