துபாய் க்ரீக்கின் நீருக்கடியில் நடக்கும் அனுபவத்தை வழங்கும் ‘பாதசாரி சுரங்கப்பாதை’..!! எப்படி அணுகுவது..??
துபாயில் உள்ள பர் துபாய் மற்றும் தேரா ஆகிய இரு மாவட்டங்களும் கடலால் பிரிக்கப்பட்ட துபாயின் முக்கிய பகுதிகளாகும். அதாவது இவ்விரண்டு பகுதிகளும் துபாய் க்ரீக் (dubai creek) கடல் பகுதியால் பிரிக்கப்பட்டு மெட்ரோ, அப்ரா, வாட்டர் டாக்ஸி, அல் ஷிந்தகா சுரங்கப்பாதை மற்றும் இன்ஃபினிட்டி மேம்பாலம் மூலம் போக்குவரத்து வசதியானது இணைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த இரண்டு மாவட்டங்களில் வசிக்கக்கூடிய குடியிருப்பாளர்களுக்கு வசதியாக, இவ்விரு மாவட்டங்களை இணைக்கும் வகையில் ‘பாதசாரி சுரங்கப்பாதை’ ஒன்றும் (pedestrian tunnel) நீருக்கடியில் அமைந்துள்ளது. துபாயின் கலாச்சார வரலாற்றில் வேரூன்றிய இந்த பிரபலமான இடங்களை இணைக்கும் இந்த சுரங்கப்பாதை, துபாய் க்ரீக் கடலின் அடியில் விரைவாகவும், பாதுகாப்பாகவும், இலவசமாகவும், எளிதாகவும் நடக்க குடியிருப்பாளர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.
எப்படி அணுகுவது?
அல் ஷிந்தகா மியூசியத்தின் பார்க்கிங் பகுதியிலிருந்து சில நிமிடங்களில் நடந்து செல்லும் தூரத்தில் இந்த பாதசாரி சுரங்கப்பாதையானது அமைந்துள்ளது. தற்போது எந்த வழிகாட்டுதல் பலகையும் அப்பகுதியில் வைக்கப்படவில்லை. ஆயினும் அதன் நுழைவாயிலைக் குறிக்கும் பலகையை உங்களால் அடையாளம் காண முடியும்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeவெயில் இல்லாமல் நிழலில் நடக்க சிறந்த தேர்வு
துபாயின் வளமான வரலாற்றைக் காண்பிக்கும் வரலாற்று அருங்காட்சியகத்தின் தாயகமான அல் ஷிண்டாகா, தங்கம் மற்றும் மசாலா சூக்குகளுக்கு பிரபலமான தேரா ஆகிய பகுதிகளுக்கு இடையே நடந்து செல்ல விரும்பும் பாதசாரிகள், வெயிலின் தாக்கத்திலிருந்தும் போக்குவரத்து நெரிசலில் இருந்தும் தப்பிக்கலாம்.
அதுமட்டுமில்லாமல், இந்த சுரங்கப்பாதை 30 நிமிடங்கள் வரை சேமிக்க உதவுவதாகவும் சில குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர். அதாவது பர் துபாயிலிருந்து தேராவிற்கு காரில் செல்வதற்கு பதிலாக, காரை அல் ஷிண்டாகாவில் நிறுத்திவிட்டு இதன் வழியாக செல்ல மொத்தமாக ஐந்து முதல் ஏழு நிமிடங்களே எடுப்பதாக தெரிவிக்கின்றனர்.
துபாய் போன்ற பரபரப்பான நகர்ப்புற சூழலுக்குள் உடற்பயிற்சி பாதையை தேடும் குடியிருப்பாளர்களிடையே இந்த சுரங்கப்பாதை பிரபலமாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக மாலை நடைப்பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதை மாறிவிட்டதாகவும், ஷிண்டாகாவிலிருந்து தேரா வரை நடப்பது புத்துணர்ச்சியைத் தருவதாகவும் சில குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சுரங்கப்பாதை பயனர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், துபாயின் இரண்டு கலாச்சார மற்றும் வளமான பகுதிகளை இணைக்கும் க்ரீக் கடலின் கீழே நடக்கும் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குவதாகவும் குடியிருப்பாளர்கள் பகிரந்துள்ளனர்.
சுரங்கப்பாதைக்குள் சைக்கிள் ஓட்டுவது, துப்புவது, தூங்குவது, புகைபிடிப்பது, சிறுநீர் கழிப்பது, விளையாடுவது அல்லது சாப்பிடுவது போன்றவை கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. ஏதேனும் மீறல்கள் அல்லது அவசரநிலைகள் ஏற்பட்டால், பாதுகாப்புக் காவலர்கள் பயனர்களுடன் தொடர்புகொள்வதற்காக மெகாஃபோன்கள் சுரங்கப்பாதையின் முக்கிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel