துபாய்: வாகனம் ஓட்டிக்கொண்டே இரண்டு கைகளிலும் ஃபோன், செய்தித்தாள் படிக்கும் வாகன ஓட்டிகள்.. ஸ்மார்ட் கேமராக்களில் பதிவான வீடியோ..!!
அமீரகத்தை பொறுத்தவரை சாலை பயனர்களின் பாதுகாப்பிற்காகவும் போக்குவரத்தை மேம்படுத்தவும் விதிமீறல் புரிபவர்களை கண்டறிந்து தண்டனை வழங்குவதற்கும் சாலைகளில் ரேடார் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் விதிமீறல் புரிபவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு உரிய அபராதமும் தண்டனையும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் துபாயில் புதிதாக வாகன ஓட்டிகளின் நடத்தையை கண்காணிக்கும் வகையில் ஸ்மார்ட் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. துபாய் காவல்துறையின் ஸ்மார்ட் கேமராக்கள் மூலம் சாலையில் போக்குவரத்து விதிமீறல்கள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
அதில் இந்த சிஸ்டம் கைப்பற்றிய சமீபத்திய குற்றங்களில் கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுவது தொடர்பான தீவிர சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஒரு நிகழ்வாக வாகனத்தை ஓட்டும் பெண் ஒருவர் இரண்டு போன்களை உபயோகிப்பது கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறை பகிர்ந்த வீடியோவில் அவர் தொலைபேசி அழைப்பில் இருப்பதாகத் தெரிகிறது. அதிலும் இரண்டு ஃபோன்களையும் தன் காதுகளில் பிடித்துக் கொண்டு, ஸ்டீயரிங் மீது கைகள் இல்லாமல் வாகனம் ஓட்டியுள்ளார்.
அதே கிளிப்பில், மற்றொரு ஓட்டுநர் சாலையில் செய்தித்தாளை படிக்கிறார். அது அவரது கவனத்தை நெடுஞ்சாலையில் இருந்து விலக்கியது மட்டுமின்றி, அவர் தனக்கு எதிரே செய்தித்தாளை பிடித்திருந்ததால் போக்குவரத்தைப் பற்றிய அவரது பார்வையை முழுவதுமாக தடுத்துள்ளது.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeமேற்கூறியது போன்ற விதிமீறல்கள் அனைத்தும் துபாயின் ஸ்மார்ட் கேமராக்களில் கண்டறியப்பட்டுள்ளன. சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ள இந்த துபாயின் போக்குவரத்து அமைப்புகள் சாலைகளில் விதிமீறல்கள் மற்றும் பொறுப்பற்ற நடத்தைகளைக் கண்டறிய முடியும் என்றும் குறிப்பாக வாகனத்தின் கண்ணாடிகள் டின்ட் (tint) செய்யப்பட்டிருந்தால் கூட கண்டறியலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பொது போக்குவரத்து துறையின் இயக்குனர் மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி கூறுகையில், “துபாய் காவல்துறை சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து விதிமுறைகளை திறம்பட செயல்படுத்தவும் ஸ்மார்ட் போக்குவரத்து தொழில்நுட்பங்களில் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார். வாகனம் ஓட்டும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்துதல், டெயில்கேட்டிங் மற்றும் திடீர் விலகல் உள்ளிட்ட பல போக்குவரத்து குற்றங்களுக்காக வாகனங்கள் 30 நாட்கள் வரை பறிமுதல் செய்யப்படும் என்று அல் மஸ்ரூயி வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டியுள்ளார். 400 முதல் 1,000 திர்ஹம் வரையிலான அபராதம் மற்றும் இந்தக் குற்றங்களுக்கு நான்கு பிளாக் பாயிண்டுகள் ஆகியவற்றுடன் கூடுதலாக இந்த 30 நாட்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அல் மஸ்ரூயி கூறுகையில்: “சீட் பெல்ட் அணியாதது, மொபைல் ஃபோன் பயன்பாடு மற்றும் சாலையில் இருந்து பிற கவனச்சிதறல்கள் போன்ற பல்வேறு மீறல்களைக் கண்டறியும் வகையில் மேம்பட்ட அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுவாரஸ்யமாக, வாகனத்தின் கண்ணாடி டின்ட் செய்யப்பட்டு இருந்தாலும், இந்த மீறல்களை அவர்களால் கண்டுபிடிக்க முடியும்”
“இந்த தொழில்நுட்பங்களின் பயன்பாடு, போக்குவரத்து பாதுகாப்பில் உலகளவில் முதன்மையாக மாறுவதற்கான துபாயின் நோக்கத்தை ஆதரிக்கிறது மற்றும் சாலை விபத்து இறப்புகளைக் குறைக்கும் மூலோபாய இலக்குடன் ஒத்துப்போகிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சாலையை ஓட்டும் வாகன ஓட்டிகள் கவனச்சிதறல்கள் இல்லாமல் பொறுப்பான முறையில் விதிகளை மதித்து வாகனம் ஓட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel