ADVERTISEMENT

துபாய், அபுதாபி இடையே ‘ஷேரிங் டாக்ஸி’ சேவையை தொடங்கிய RTA..!! கட்டணத்தில் 75% வரை மிச்சமாகும் எனவும் தகவல்..!!

Published: 5 Nov 2024, 8:16 AM |
Updated: 5 Nov 2024, 8:16 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள இரு எமிரேட்களான துபாய் மற்றும் அபுதாபி இடையே புதிய ஷேரிங் டாக்ஸி என்றழைக்கப்படும் டாக்ஸி பகிர்வு (sharing taxi) சேவையை நேற்று திங்களன்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தொடங்கியுள்ளது. RTAவின் இந்த முயற்சியானது டாக்ஸியில் பயணிக்கும் பயணிகளின் பயணச் செலவில் 75% வரை சேமிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும், பயணிகளுக்கு வசதியான, வேகமான மற்றும் மலிவு போக்குவரத்து விருப்பத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த புதிய ஷேரிங் டாக்ஸி சேவையானது ஆறு மாதங்களுக்கு சோதனை செய்யப்படும் என்றும், பின்னர் அதன் விளைவுகளின் அடிப்படையில் மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்றும் RTA கூறியுள்ளது.

இது குறித்து RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பயணிகள் துபாயில் உள்ள இபின் பதூதா (Ibn Batuta) மையத்திற்கும் அபுதாபியில் உள்ள அல் வஹ்தா (Al Wahdha) மையத்திற்கும் இடையே இயக்கப்படும் டாக்ஸிகளில் சவாரிகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் இது துபாய் மற்றும் அபுதாபிக்கு இடையே அடிக்கடி பயணிப்பவர்களுக்கு பயணச் செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் RTA கூறியுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து RTAவின் பொதுப் போக்குவரத்து முகமையின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநர் அடெல் ஷக்ரி பேசியபோது, துபாய் மற்றும் அபுதாபி ஆகிய இரண்டு இடங்களும் பொது போக்குவரத்து மையங்கள் மற்றும் பார்க்கிங் வசதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், “இரண்டு எமிரேட்டுகளுக்கு இடையில் நான்கு பயணிகள் ஒரே டாக்ஸியைப் பகிர்ந்து கொள்ளும்போது, பயணி ஒருவருக்கு ​​75% வரை செலவைக் குறைப்பதன் மூலம் இந்த முயற்சியானது இரு எமிரேட்களுக்கு இடையே பயணிக்கும் பயணிகளுக்கு பெரிதும் பயனளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல், இந்த சோதனைச் சேவையானது, முழுக் கட்டணத்தையும் ஒரு பயணியே செலுத்துவதற்குப் பதிலாக, ஒவ்வொரு பயணிக்கும் 66 திர்ஹம்கள் என பகிரப்பட்ட பயணத்தில் செலுத்த உதவும் என்றும், பயணிகள் தங்கள் வங்கி அட்டைகள் அல்லது NOL அட்டைகள் மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம் என்பதையும் ஷக்ரி தெளிவுபடுத்தியுள்ளார்.

எனவே, இரண்டு பயணிகள் மட்டும் டாக்ஸி கட்டணத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​ஒரு பயணிக்கு 132 திர்ஹமும், மூன்று பயணிகள் ஒன்றாகப் பயணிக்கும் போது 88 திர்ஹமும், அதுவே நான்கு பயணிகள் பயணிக்கும் போது குறைந்தபட்ச கட்டணமாக 66 திர்ஹமும் ஒரு பயணிக்கு செலவாகும் என RTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியானது, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், கார்பன் உமிழ்வையும் குறைக்கும் என்பதால் இது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் எனவும், மற்றும் தனிநபரால் இயக்கப்படும் உரிமம் பெறாத போக்குவரத்து சேவைகளை கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக RTA வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel