அமீரக செய்திகள்

அமீரகத்தில் நவம்பர் முதல் நடைமுறைக்கு வரும் புதிய விதிகள் மற்றும் அப்டேட்டுகளின் பட்டியல் இங்கே…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் இந்த நவம்பர் மாதம் முதல், பொதுமன்னிப்பு திட்டத்தில் இருந்து போக்குவரத்து அபராதத் தள்ளுபடிகள் மற்றும் புதிய சாலிக் டோல்கேட்கள் வரை என பல முக்கியமான மாற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகளை காண உள்ளனர்.

இந்த புதுப்பிப்புகள் UAE முழுவதும் வசிப்பவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் மேம்பாடுகளையும் கொண்டு வரவுள்ளன. அதனடிப்படையில் இந்த மாதத்தில் குடியிருப்பாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் என்ன என்பது பற்றி நாமும் தெரிந்து கொள்ளலாம்.

1. பொது மன்னிப்பு நீட்டிப்பு – நவம்பர் 1 முதல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் காலாவதியான விசாவுடன் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் அக்டோபர் 31 அன்று முடிவடைந்த நிலையில், இந்த பொது மன்னிப்பு திட்டமானது மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆம், அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான பெடரல் ஆணையம், (ICP) 53வது தேசிய தின கொண்டாட்டங்களுடன் இணைந்து பொது மன்னிப்பு திட்டத்தை டிசம்பர் 31, 2024 வரை நீட்டிக்கப்படுவதாக அக்டோபர் 31ம் தேதி அறிவித்தது.

எனவே, காலாவதியான அல்லது ரத்து செய்யப்பட்ட விசாவில் நாட்டில் வசிப்பவர்கள், அதிக காலம் தங்கியிருக்கும் அபராதம் செலுத்த வேண்டிய அவசியமின்றி தங்கள் விசா நிலையை முறைப்படுத்துவதன் மூலம் இந்த திட்டத்தின் வாயிலாக பெரிதும் பயனடையலாம்.

2. ஷார்ஜாவில் கட்டண பார்க்கிங் நேரம் நீட்டிப்பு

ஷார்ஜாவில் கட்டண பார்க்கிங் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், நீல நிற பார்க்கிங் சைன்போர்டுகள் உள்ள மண்டலங்களில் வாகனத்தை நிறுத்தலாம். சமீபத்தில், ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டி, ‘7-நாள் மண்டலங்களில்’ காலை 8 மணி முதல் 12 மணி வரை கட்டணம் செலுத்தும் பார்க்கிங் நேரம் இருக்கும் என்று அறிவித்தது, வாரத்தின் ஒவ்வொரு நாளும் இந்த கட்டணம் விதிக்கப்படும்.

இவை நீல நிற அடையாளங்களால் குறிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களில், வெள்ளிக்கிழமைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் கூட பார்க்கிங் செய்ய நீங்கள் பணம் செலுத்த வேண்டும், மேலும் இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு, குறிப்பாக இரவு 10 மணிக்குப் பிறகு பார்க்கிங் சிக்கல்களை எளிதாக்கும் நோக்கத்தை மேம்படுத்துகிறது.

எவ்வாறாயினும், ஒரு மணி நேரத்திற்கு 2 திர்ஹம்ஸ் கட்டணத்தில் தொடங்கும் பொது பார்க்கிங் கட்டணத்தில் மேலும் கட்டண அதிகரிப்பு இருக்காது என்று ஷார்ஜாவின் நகராட்சி நிர்வாகம் குடியிருப்பாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

3. அபுதாபியில் தொடங்கிய ஷேக் சையத் பெஸ்டிவல்

அபுதாபியில் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடத்தப்படும் பிரபலமான ஷேக் சையத் ஃபெஸ்டிவலின் இந்தாண்டு பதிப்பானது, பிரம்மாண்ட வானவேடிக்கைகள், சிறப்பு விழாக்கள் மற்றும் கச்சேரிகள் என சுமார் 6,000 க்கும் மேற்பட்ட சர்வதேச கலாச்சார நிகழ்வுகளுடன் நவம்பர் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது.

மேலும், இந்தாண்டு 30,000 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மற்றும் 27 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளதால் இந்த பதிப்பு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 1, 2024 முதல் பிப்ரவரி 29, 2025 வரை சுமார் நான்கு மாதங்களுக்கு நடைபெறும் ஷேக் சையத் ஃபெஸ்டிவலின் 2024-2025 பதிப்பு இம்முறை புதிய வடிவமைப்பு மற்றும் புதிய நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளுடன் முதல் முறையாக வாராந்திர விழாக்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவு கட்டணம்: ஒரு நபருக்கு 10 திர்ஹம்ஸ். மாற்றுத் திறனாளிகள், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு கட்டண விலக்கு உண்டு.

நேரம்: ஞாயிறு முதல் வியாழன் வரை, மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை. வெள்ளி மற்றும் சனி, மாலை 4 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை.

4. அஜ்மானில் போக்குவரத்து அபராதத் தள்ளுபடி

அஜ்மான் எமிரேட்டில் அக்டோபர் 31, 2024க்கு முன் போக்குவரத்து குற்றங்களில் ஈடுபட்ட குடியிருப்பாளர்களுக்கு வரும் நவம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 15, 2024 வரை, போக்குவரத்து அபராதங்களில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று அஜ்மான் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த தள்ளுபடி காலம் நவம்பர் 4 முதல் டிசம்பர் 15, 2024 வரை நீடிக்கும், எவ்வாறாயினும், மோசமான விதி மீறல்களை இந்த தள்ளுபடி உள்ளடக்காது என்றும் அதிகாரம் கூறியுள்ளது. இலகுரக அல்லது கனரக வாகனத்தை கவனக்குறைவாக ஓட்டுதல், டிரக் ஓட்டுநர்கள் தடைசெய்யப்பட்ட இடத்தில் முந்திச் செல்வது, அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 80 கிமீக்கு மேல் தாண்டிச் செல்வது, முன் அனுமதியின்றி வாகனத்தில் மாற்றங்களைச் செய்வது ஆகியவை இதில் சேர்க்கப்படாத மோசமான மீறல்கள் ஆகும்.

5. துபாயில் புதிய சாலிக் கேட்கள்

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ‘பிசினஸ் பே கேட் (Business Bay Gate)’ மற்றும் ‘அல் சஃபா சவுத் கேட் (Al Safa South Gate)’ ஆகிய இரண்டு புதிய சாலிக் டோல் கேட்களை நவம்பர் 24 அன்று அறிமுகப்படுத்தவுள்ளது, இதன் மூலம் துபாயில் உள்ள சாலிக் இயக்கப்படும் டோல் கேட்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆக உயர்கிறது.

இந்த புதிய டோல் கேட்கள் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் ஷேக் முகமது பின் சையத் சாலை (E311), துபாய்-அல் அய்ன் சாலை, ராஸ் அல் கோர் ஸ்ட்ரீட் மற்றும் அல் மனாமா ஸ்ட்ரீட் உள்ளிட்ட மாற்று வழிகள் மூலம் டோல்கேட் இல்லாத சீரான போக்குவரத்து ஓட்டத்தையும் இந்த முயற்சி உறுதி செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!