திருச்சி-தம்மாம் இடையே நேரடி விமான சேவையை தொடங்கவுள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்!! விமானத்தின் நேர அட்டவணை வெளியீடு….

இந்தியாவின் பட்ஜெட் கேரியரான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (IX) திருச்சி மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள தம்மாம் இடையே நேரடி விமான சேவையை தொடங்குவதன் மூலம் அதன் சர்வதேச செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்போது துபாய், ஷார்ஜா, அபுதாபி, தோஹா, குவைத் மற்றும் மஸ்கட் ஆகிய நாடுகளுக்கு விமான சேவையை இயக்கி வரும் நிலையில், திருச்சியில் இருந்து சவுதி அரேபியாவிற்கு இயக்கப்படவுள்ளது. திருச்சி மற்றும் தம்மாம் இடையே இயக்கப்படும் முதல் விமான சேவையும் இதுவாகும்.
இது தொடர்பாக வெளியான அறிக்கையின் படி, ஜனவரி 2, 2025 முதல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சிராப்பள்ளி (TRZ) மற்றும் தம்மாம் (DMM) இடையே வாரத்திற்கு இருமுறை வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்பது தெரிய வந்துள்ளது.
திருச்சிராப்பள்ளி-தம்மாம் விமான அட்டவணை:
- திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்படும் விமானம், IX927, திருச்சிராப்பள்ளியில் இருந்து காலை 06:05 மணிக்கு புறப்பட்டு உள்ளூர் நேரப்படி காலை 9:10 மணிக்கு தம்மாம் வந்தடையும்.
- திரும்பும் விமானம், IX928, தம்மாமிலிருந்து உள்ளூர் நேரப்படி காலை 10:10 மணிக்குப் புறப்பட்டு மாலை 05:40 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் தரையிறங்கும்.
புதிய சேவைகள் இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையே, குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள இந்தியர்களுடன் நேரடி இணைப்புக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் என்று கூறப்படுகிறது. தம்மமிற்காக பிரத்யேக சேவை தொடங்கப்படுவதால் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச பயணிகள் போக்குவரத்து அதிகரிக்கும் என விமான நிலைய இயக்குனர் ஜி.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், திருச்சி சுற்றுலா கூட்டமைப்பு துணைத் தலைவர் எஸ்.ஏ.முபாஷிர் அவர்கள், தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த பலர் அங்கு பணிபுரிந்து வருவதால், தம்மாமுக்கு விமான சேவை நல்ல முன்னேற்றம் என்று கூறியதுடன், இதே போல் திருச்சியில் இருந்து ரியாத்துக்கு ஒரு சேவையை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை விமான நிறுவனம் ஆராயலாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது போன்ற வளைகுடா நாடுகளின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel