துபாயில் குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் இரவுநேரத்தில் குளிர்ச்சியான கடற்பரப்பில் நீந்தி மகிழும் தனித்துவமான அனுபவத்தைப் பெறுவதற்காக கடந்த ஆண்டு 2023 மே மாதம், ஜுமைரா 2, ஜுமைரா 3 மற்றும் உம் சுகீம் 1 ஆகிய இடங்களில் இரவு கடற்கரைகள் (night beach) துபாய் முனிசிபாலிட்டியால் திறக்கப்பட்டது. இந்நிலையில் 18 மாதங்களில் சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்களை இந்த இரவு கடற்கரைகள் ஈர்த்துள்ளதாக துபாய் முனிசிபாலிட்டி அறிவித்துள்ளது.
இந்த இரவு கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளையும் குடியிருப்பாளர்களையும் குறிப்பாக கோடை மாதங்களில் வெகுவாக ஈர்த்ததாக முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது. மேலும் இந்த இரவு கடற்கரைகள் சுற்றுலா பயணிகள் மற்றும் குடியிருப்பாளர்கள் மத்தியில் பிரபலமான ஒரு இடமாகவும், இங்கு மக்கள் ஆர்வம் காட்டுவதற்கு நிறைய காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதில் குறிப்பாக, இரவு நேரக் கடற்கரைகளில் பாதுகாப்பான 24/7 நீச்சல் செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக, மொத்தம் 800 மீட்டர் தூரத்திற்கு மேம்பட்ட விளக்கு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளது பார்வையாளர்களுக்கு அச்சமின்றி இரவு நேரங்களில் நீந்தி மகிழ முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும் பொது விழிப்புணர்வு தகவல்களை தொடர்ந்து காண்பிக்கும் எலெக்ட்ரானிக் திரைகளும் இங்கு அமைந்துள்ளன.
இவை தவிர, அவசரசூழ்நிலைகளில் உதவுதற்காக ஒரு செயல்பாட்டு மேலாளர், ஒரு உதவி இயக்க மேலாளர், மூன்று மீட்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் 16 பயிற்சி பெற்ற உயிர்காப்பாளர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர், நவீன மீட்புக் கருவிகள் மற்றும் பீச் சைக்கிள்கள் மற்றும் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் எப்போதும் இரவு நேர கடற்கரைகளில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் இரவு நீச்சல் கடற்கரைகள் அனைவரும் அணுகக்கூடியதாகவும், மாற்றுத்திறனாளி மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு வரவேற்பு அளிக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்ய, சிறப்பு வசதிகளை துபாய் முனிசிபாலிட்டி முன்னெடுத்திருப்பது குடும்பமாக வரும் பார்வையாளர்களுக்கு மனநிறைவை அளிப்பதாக துபாய் முனிசிபாலிட்டியின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளும் நீந்தி மகிழ வேண்டுமென நீச்சலுக்கான மிதக்கும் நாற்காலிகள், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயிற்சியளிக்கப்பட்ட மீட்புக் குழுக்கள் மற்றும் அவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட முழு வசதிகளுடன் கூடிய ஓய்வு பகுதி ஆகியவையும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியானது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை இரவில் துபாயின் கடற்கரைகளின் அழகை ரசிக்க அனுமதிப்பதுடன் அவர்களுக்கு மிக உயர்ந்த வசதிகள், ஆடம்பரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்கிறது என்று துபாய் முனிசிபாலிட்டியின் பொது கடற்கரைகள் மற்றும் நீர் கால்வாய்கள் துறையின் இயக்குனர் இப்ராஹிம் ஜுமா குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel