அமீரகத்தில் அடுத்த 10 வருடங்களில் மழை மற்றும் வெப்பநிலையின் தீவிரம் அதிகரிக்கும்!! NCM அதிகாரி எச்சரிக்கை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த பத்து வருடங்களில் மழையின் தீவிரம் 10 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும் என்றும், அதேவேளை சராசரி வெப்பநிலை 1.7 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் பதிவான வரலாறு காணாத மழையைப் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் இனி வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படுவதால், தயார்நிலையின் அவசரத் தேவையை தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் டாக்டர் முகமது அல் அப்ரி எடுத்துரைத்துள்ளார். மேலும் “இந்த காலநிலை மாற்றங்கள் குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் எதிர்பார்க்கப்படுகின்றன” என்றும் அப்ரி கூறியுள்ளார்.
அத்துடன் டாக்டர் அல் அப்ரி கடந்த ஏப்ரல் 14 முதல் 17 வரை பதிவு செய்யப்பட்ட விதிவிலக்கான கனமழையை நினைவு கூர்ந்தார், அந்த சமயத்தில் நாட்டின் சில பகுதிகளில் 100 மிமீக்கு மேல் மழை பெய்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகபட்சமாக காட்ம் அல் ஷக்லாவில் (Khatm Al Shakla) 259 மிமீ மழையும், அல் மர்மூம் பகுதியில் 219 மிமீ மழையும் பதிவாகியது என்று அவர் கூறினார்.
இந்நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் காலநிலை மாற்றம் தொடர்பான வானிலை நிகழ்வுகளால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிராந்தியத்தின் மற்ற பகுதிகளும் பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் காலநிலை மாற்றம் தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் நாடுகளை ஒரே மாதிரியாக பாதிக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
‘Crisis and Natural Disaster Management’ என்ற தலைப்பில் துபாய் காவல்துறையால் நடத்தப்பட்ட சமீபத்திய கருத்தரங்கில் பேசிய டாக்டர் அல் அப்ரி, பத்து வருடங்களில் மழைப்பொழிவு விகிதம் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும், கணிப்புகளின் துல்லியத்தைப் பொருட்படுத்தாமல் எச்சரிக்கைகளை வழங்குவது முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஏப்ரல் மாதம் பெய்த கடுமையான மழை போன்ற அசாதாரண வானிலை நிலைமைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளையும் கருத்தரங்கின் போது அவர் மதிப்பாய்வு செய்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் அல் அப்ரி பேசியதாவது: “நூற்றாண்டின் இறுதியில், வருடாந்திர சராசரி வெப்பநிலையில் படிப்படியாக அதிகரிப்பைக் காண்போம். இதனடிப்படையில் அதிக இரவுகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டும் மற்றும் பகல்நேர வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும். மேலும் மழைப்பொழிவு 20 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்று கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய காலநிலை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில், ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவில் 10 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை அதிகரித்து, கணிசமான உயர்வைக் காண முடிந்தது என்று கூறிய டாக்டர். அல்-அப்ரி, இந்த வானிலை முன்னறிவிப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
140 மேற்பரப்பு மற்றும் கடல் வானிலை நிலையங்கள், ஏழு வானிலை ரேடார்கள் மற்றும் பல்வேறு கண்காணிப்பு அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அமீரகத்தில் உள்ள வானிலை உள்கட்டமைப்பு, தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வில் முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel