டிசம்பர் 7ல் நாடு முழுவதும் மழைக்கான சிறப்பு பிரார்த்தனை நடத்த அமீரக அதிபர் அழைப்பு!!
ஐக்கிய அரபு அமீரக அதிபர், நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் மழை வேண்டி பிரார்த்தனை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின் படி, அரபு மொழியில் ‘சலாத் அல் இஸ்திஸ்கா’ என்று அழைக்கப்படும் இந்த மழைக்கான சிறப்பு தொழுகையானது, வருகின்ற டிசம்பர் 7ம் தேதி, சனிக்கிழமை காலை 11 மணிக்கு அனைத்து மசூதிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி அமீரக அதிபர் வெளியிட்ட அறிவிப்பில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னாவிற்கு (பாரம்பரியங்கள்) இணங்க, தேசத்திற்கு மழை மற்றும் கருணையை ஆசீர்வதிக்க அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு மசூதிகளில் உள்ள தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அவர்கள், கடைசியாக 2022ம் ஆண்டு நாடு முழுவதும் மழைக்காக சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினார். அந்த நேரத்தில், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அழைப்பு (பாங்கு) விடுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாக இந்த பிரார்த்தனை நடைபெற்றது.
இதற்கு முன்பாக, 2021, 2020, 2017, 2014, 2011 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில், பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழைக்காக வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து எமிரேட்களிலும் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் கடந்த வாரத்தில் இருந்து வெப்பநிலை கணிசமாக குறைந்துள்ளது. திங்களன்று ராஸ் அல் கைமாவின் ஜெபல் ஜெய்ஸில் வெப்பநிலை 6.6 டிகிரி செல்சியஸாக குறைந்தது. மேலும் நாடு முழுவதும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் முன்னதாக முன்னறிவிப்பை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel