தினசரி 600 மரங்கள்.. கடந்த ஆண்டில் மட்டும் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை நடவு செய்து சாதனை படைத்த துபாய்…

பாலைவனமும் சோலைவனமாகும் என்பதற்கேற்ப வறண்ட நிலப்பரப்பைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகமானது சமீப காலங்களில் ஒரு பெரியளவில் பசுமை சாதனையை பதிவு செய்து வருகின்றது. அமீரக தலைவர்கள் நாட்டை நவீன தொழில்நுட்பங்களில் மட்டுமல்லாது இயற்கையை பேணுவதிலும் முக்கிய பங்கை ஒதுக்கியுள்ளனர். அதன்படி, கடந்த ஆண்டான 2024இல் மட்டும் துபாயில் 216,500 மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும், இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.
பாலைவன நகரமான துபாயில் பசுமையான நிலப்பரப்பை உருவாக்க துபாய் முனிசிபாலிட்டி பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் நிலையில், இந்த பசுமையான சாதனையை பதிவு செய்ய கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் சராசரியாக 600 மரங்களை நடவு செய்திருப்பதாகவும் அதிகாரசபை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காடு வளர்ப்பு மற்றும் நிலத்தோற்றம் முயற்சிகள் மூலம், எமிரேட்டின் பசுமையான இடங்களும் 391.5 ஹெக்டேர் பரப்பளவிற்கு விரிவடைந்திருப்பதாகவும், இது 2023ல் இருந்து 57 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
துபாய் முனிசிபாலிட்டி வெளியிட்ட அறிவிப்பில், அதன் பரந்த பசுமை முயற்சிகளின் ஒரு பகுதியாக, நகரம் முழுவதும் சுமார் 5.3 மில்லியன் பூக்களின் நாற்றுகள் மற்றும் அலங்கார தாவரங்களை நடவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் ஆண்டு முழுவதும் மூன்று சுழற்சிகளில் 45 மில்லியன் பருவகால பூக்களை மாற்றியதாகவும் தெரிவித்துள்ளது. எமிரேட்டில் நடப்பட்ட பல்வேறு வகையான மரங்களில், காஃப், சிட்ர், மற்றும் சமர் போன்ற பழங்குடி இனங்களும், அத்துடன் வேப்பம், ஆலிவ், இந்திய மல்லிகை போன்ற அலங்கார மரங்கள் மற்றும் பல்வேறு பனை வகைகளும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, வாஷிங்டோனியா, பிஸ்மார்க்கியா, பாயின்சியானா, போங்காமியா மற்றும் அகாசியா பிரான்சியானா போன்ற பசுமையான உயிரினங்களும் எமிரேட்டின் பசுமையை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
துபாய் பசுமை திட்டத்தின் (Dubai Green Project) கீழ், குடியிருப்பு மற்றும் நகர்ப்புறங்கள், பிரதான மற்றும் இரண்டாம் நிலை சாலைகள், இன்டர்செக்சன்கள், பொது பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் குடும்ப பகுதிகள் ஆகியவற்றில் 165 அழகுபடுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.
துபாய் முனிசிபாலிட்டியின் 2024 திட்டங்களில் ஷேக் சையத் சாலை, அல் ஜாமாயல் ஸ்ட்ரீட், அல் கவானீஜ் ஸ்ட்ரீட், அல் கைல் சாலை, ஷேக் முகமது பின் சையத் சாலை மற்றும் லதீஃபா பின்த் ஹம்தான் ஸ்ட்ரீட் போன்ற முக்கிய இன்டர்செக்ஷன்கள் மற்றும் பாலங்களை பசுமைப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற முக்கிய திட்டங்கள் ஷேக் ரஷீத் பின் சயீத் சாலை, அல் இட்டிஹாத் சாலை, துபாய் -அல் அய்ன் சாலை, மற்றும் அல் மிஷர், அல் பார்ஷா, நாத் ஹம்மர், நாத் அல் ஷெபா, மிர்திஃப், அபு ஹெயில் மற்றும் ஓத் அல் மியூட்டீனா உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள பல்வேறு உள் சாலைகளில் பசுமைத் தோற்றத்தை உருவாக்குவது ஆகும்.
இது குறித்து துபாய் முனிசிபாலிட்டியின் பொது வசதிகள் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பத்ர் அன்வாஹி அவர்கள் பேசிய போது, பசுமையான இடங்களை விரிவாக்குவதன் மூலமும், காற்று மற்றும் மண்ணின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமும், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தணிப்பதன் மூலமும், பல்லுயிர் தன்மையைப் பாதுகாப்பதன் மூலமும் துபாயில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே நோக்கம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசுகையில், “துபாய் நகராட்சியால் செயல்படுத்தப்பட்ட அழகுபடுத்தல் மற்றும் நடவு திட்டங்கள் துபாயின் நிலைத்தன்மை மற்றும் அழகியல் முறையீட்டை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel