ரமலான் 2025: எப்போது துவங்கும்..?? வேலை நேரம், பள்ளி நேரம் குறைப்பு.. பார்க்கிங் நேரங்களில் மாற்றம்..

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் நெருங்கி வரும் நிலையில், அமீரகத்தில் வசிக்கும் இஸ்லாமிய குடியிருப்பாளர்கள் ரமலான் மாதத்தை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். துபாய் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறப்பணிகள் துறை (IACAD) வெளியிட்டுள்ள ஹிஜ்ரி நாட்காட்டியின்படி, ரமலான் மார்ச் மாதத்தில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை ரமலான் மாதத்தின் போது குடியிருப்பாளர்களின் வேலை நேரங்கள், வாகன பார்க்கிங், பள்ளி நேரங்கள் உட்பட அவர்களின் தினசரி செயல்பாடுகள் வேறுபட்டதாக இருக்கும். அவற்றைப் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்:
ரமலான் எப்போது துவங்கும்?
வானியலாளர்களின் கூற்றுப்படி அமீரகத்தில் ரமலான் மாதம் வரும் மார்ச் 1ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் இது பிறை பார்ப்பதன் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படும். பொதுவாக ரமலான் மாதம் 29 நாட்கள் அல்லது 30 நாட்கள் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை நேரங்கள்
அமீரகத்தில் ரமலானை முன்னிட்டு ஊழியர்களின் வேலை நேரத்தைக் குறைப்பது வழக்கமான ஒன்றாகும். குறைக்கப்பட்ட வேலை நேரம் என்பது நோன்பு கடைபிடிக்கும் மற்றும் நோன்பு கடைபிடிக்காத மற்ற ஊழியர்களுக்கும் பொருந்தும். இது ஊழியர்களுக்கு மாதத்தின் ஆன்மீக நடவடிக்கைகள் மற்றும் கலாச்சார நடைமுறைகளில் ஈடுபட உதவுகிறது.
அமீரக அரசாங்கம் பொதுவாக இந்த மாதத்தில் பொது மற்றும் தனியார் துறைகளுக்கு குறைக்கப்பட்ட வேலை நேரத்தை அறிவிக்கிறது. சில வேலைகளுக்கு அதிக நேரம் தேவைப்பட்டாலும், தனியார் துறையில் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் வேலைநாளில் இரண்டு மணி நேரக் குறைப்பை இந்த மாதத்தில் அனுபவிக்கின்றனர். அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் விரைவிலேயே மூடப்படும். பொதுத்துறை ஊழியர்களின் வேலை நேரம் வழக்கமான எட்டு மணிநேரத்திற்குப் பதிலாக ஆறாகக் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி அட்டவணை
ரமலான் மாதத்தில் பள்ளி செயல்படும் நாட்கள் பொதுவாக தினசரி ஐந்து மணிநேரமாக குறைக்கப்படுகிறது. இருப்பினும், இந்த ஆண்டு, ரமலான் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்படும் என்று கூறப்படுகிறது.
பார்க்கிங்
ரமலான் காலத்தில் கட்டண பார்க்கிங் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது. இவை ரமலான் மாதத்தையொட்டி ஒவ்வொரு எமிரேட்டிலும் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு, துபாய் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் கட்டணம் பொருந்தும் என்று அறிவித்திருந்தது. மேலும், குடியிருப்பாளர்களுக்கு வார நாட்களில் இரண்டு மணி நேரம் இலவச பார்க்கிங் வசதியையும் அறிவித்திருந்தது. இருந்தபோதிலும் இந்த வருடத்திற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஃப்தார் கூடாரம்
ரமலானின் போது இஃப்தார் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது அன்றைய நோன்பை முறிக்கும் உணவைக் குறிக்கிறது. இஃப்தார் என்பது பொதுவாக குடும்பத்தினரும் நண்பர்களும் கூடி ஒரு சிறப்பு உணவை உண்டு மகிழும் நேரமாகும். அமீரகத்தை பொறுத்தவரை ரமலான் மாதத்தின் போது பல்வேறு இடங்களில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு இஃப்தார் உணவுகள் இலவசமாக வழங்கப்படும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel