அமீரகத்தில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட திட்டமிட்டிருந்த 3 பேர் கையும் களவுமாக கைது!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் போலியான வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்த மூன்று அரபு நாட்டவர்களை காவல்துறை அதிகாரிகள் கையும்களவுமாகப் பிடித்துள்ளனர். ராஸ் அல் கைமாவில் உள்ள ஒரு தொழிலதிபர், இரண்டு கூட்டாளிகளின் உதவியுடன், போலி நாணயத்தை புழக்கத்தில் விட திட்டமிட்டிருந்த நிலையில், கள்ளநோட்டுக் கும்பலை அதிகாரிகள் கைது செய்ததாகவும், அவர்களிடம் இருந்து சுமார் 7.5 மில்லியன் டாலர்கள் (27.5 மில்லியன் திர்ஹம்ஸ்) பணத்தை பறிமுதல் செய்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கள்ளநோட்டு குறித்து காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, உடனடியாக சிறப்பு பணிக்குழு அமைத்து, ரகசியமாகச் செயல்பட்டு அந்த கும்பலைப் பிடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ராஸ் அல் கைமா காவல்துறையின் ஜெனரல் கமாண்ட், பொது குற்றப் பாதுகாப்புத் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் ஒத்துழைப்புடன், அந்தக் கும்பலை வெற்றிகரமாகக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கூடுதல் போலி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், மேலும் குற்றவாளிகள் பொது வழக்கறிஞருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தேசிய பொருளாதாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளில் நிதி நம்பிக்கையை சீர்குலைப்பதால், எந்தவொரு போலி நாணயத்தையும், வைத்திருப்பது அல்லது ப்ரோமோஷன் செய்வது சட்டத்தால் தண்டிக்கப்படும் கடுமையான குற்றம் என்று ராஸ் அல் கைமா காவல்துறை மீண்டும் வலியுறுத்தியது.
மேலும், நிதி மோசடி மற்றும் கள்ளநோட்டுத் திட்டங்களுக்குப் பலியாவதைத் தவிர்க்குமாறும், இத்தகைய செயலில் சந்தேகம் இருந்தால் உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் பொதுமக்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel